Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்.. 3 பேர் கைது..

Tiruvarur School incident: திருவாரூர் பள்ளியில் மனிதக்கழிவு கலந்த குடிநீர், சமையல் பொருள் சேதம் உள்ளிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. போலீசார் நடவடிக்கை எடுத்து விஜயராஜ், காளிதாஸ், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்.. 3 பேர் கைது..
காரியாங்குடி ஊராட்சி பள்ளிImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Jul 2025 07:09 AM

திருவாரூர் ஜூலை 19: திருவாரூர் (Thiruvarur) காரியாங்குடி ஊராட்சி பள்ளியில் (Kariyangudi Panchayat School) சமையலறை பூட்டு உடைக்கப்பட்டு, மளிகைப் பொருட்கள் சேதமடைந்தன. குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருந்ததையும் பள்ளி மரங்கள் வெட்டப்பட்டதையும் ஆசிரியர்கள் கண்டறிந்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து சம்பவ இடத்தில் சான்றுகள் கண்டுபிடித்தனர். கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சிகள் கண்டனத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். விஜயராஜ், காளிதாஸ், செந்தில் ஆகியோர் கைது (Vijayaraj, Kalidas and Senthil arrested) செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அருவருப்பான சம்பவம்

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் இயங்கிவரும் பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அருவருப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்று, கிராம மக்களையும், கல்வித் துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பள்ளியில் 31 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 2025 ஜூலை 14ஆம் தேதி, காலை உணவு திட்டத்துக்காக சமையலர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தபோது, சமையலறையின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

பள்ளி தலைமையாசிரியர் காவல்நிலையத்தில் புகார்

உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சமையலுக்காக வைத்திருந்த மளிகை பொருட்கள், பாத்திரங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் (சின்டெக்ஸ் டேங்க்) மனிதக்கழிவு கலந்து இருப்பதும், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு, அறுந்த தேங்காய், இறைச்சி சமைத்த சான்றுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மோப்ப நாய்கள் உதவியுடன் மேலதிக சோதனையும் நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கண்டுபிடிக்கப்படாத குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், அரசியல் கட்சிகள் இந்த நிகழ்வை தீவிரமாக கண்டித்தன. விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் விசாரணை தீவிரமடைந்தது.

காவல்துறையினர் விசாரணை: மூன்று நபர்கள் கைது

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜயராஜ், காளிதாஸ் மற்றும் செந்தில் ஆகிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த செயலில் வேறு யாரும் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயசந்தரராஜன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியில் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம், சிறிய குழந்தைகள் கல்வி பயிலும் இடங்களில் கூட பாதுகாப்பு இல்லாத நிலையை வெளிப்படுத்துவதால், சமூக ஆர்வலர்களிடையே மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.