பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறி பாயும் காளைகள், அடக்கும் வீரர்கள்.. முன்னிலை நிலவரம்!!
2026 Madurai Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால், போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. அதாவது, 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, காலை 9 மணிக்கு தொடங்கியது.

பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை, ஜனவரி 16: தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜனவரி 16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இப்போட்டியை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை ஆகும்.
இதையும் படிக்க: திருவள்ளுவர் தினம்.. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 முக்கிய வாக்குறுதிகள்!!
பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு:
அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை முதல் நாளான நேற்று (ஜன.15), அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால், போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. அதாவது, 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, காலை 9 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து, மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு தாமதமாக ஆரம்பமானது. போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தப் போட்டியை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் பலர் பாலமேட்டில் முகாமிட்டுள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.
சுற்று முடிவுகளும், முன்னிலை நிலவரமும்:
தொடர்ந்து, முதல் சுற்று முடிவடைந்த நிலையில், அதன் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 110 காளைகள் களமிறங்கிய நிலையில், 20 மாடுகள் மட்டுமே பிடிபட்டது. அதில் தமிழரசன், சின்னப்பட்டி (29) – 6 மாடுகளும், துளசிராம், மஞ்சம்பட்டி (32) – 4 மாடுகளும் அடக்கி முன்னிலையில் இருந்தனர். 2ம் சுற்று முடிவில் மொத்தம் 195 மாடுகள் களமிறங்கிய நிலையில், 25 மாடுகள் பிடிபட்டுள்ளது. இதில், 5 வீரர்கள் தலா 1 மாடு மட்டுமே பிடித்துள்ளதால் யாரும் இந்த சுற்றில் தகுதி பெறவில்லை.
இதையும் படிங்க : சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு… விஜய்யின் வாழ்த்து தேர்தலுக்காக இருக்கலாம் – தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்
அதன்படி, 3 சுற்றுகள் முடிவில் மொத்தம் 11 காளைகளை பிடித்து பொதும்பை சேர்ந்த பிரபாகரன் முதலிடத்திலும், 6 காளைகளை பிடித்த சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 2வது இடத்திலும், 4 காளைகளை பிடித்த மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் 3வது இடத்திலும் உள்ளனர்.