எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது? நீதிமன்றம் கேள்வி
Madras High Court : வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட வழக்கில், காவல்துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட வழக்கில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த அக்டோபர் 8, 2025 அன்று வழக்கறிஞர் ராஜீவ் காந்தி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan) பயணித்த கார் அவரது வாகனத்தை இடித்ததாக கூறப்படுகிறது. இதனை வழக்கறிஞர் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பிய நிலையில், அங்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில வழக்கறிஞர்கள் இணைந்து அவரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி காவல்துறையின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
‘எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது?’
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் சார்பில் பேசிய வழக்கறிஞர், ராஜீவ் காந்தி மீதான தாக்குதலுக்கு பிறகு கே. பாலு பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியதும், அதன் பின்னர் சமூக வலைதளங்கள் உட்பட பல இடங்களில் மிரட்டல்கள் வருகின்றன. எனவே, அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க : கட்சிக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. தனிக்கட்சியை தொடங்கலாம்.. மீண்டும் பாமக நிறுவனர் திட்டவட்டம்..
அப்போது காவல்துறை சார்பில் பேசிய வழக்கறிஞர் முகிலன், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட வழக்கில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி சதீஷ்குமார், தாக்குதல் ஒரே தரப்பினரால் நடந்தது என்று தெளிவாக தெரிகிறது. அப்படியிருக்க, இரு தரப்பினர் மீதும் எவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், வழக்கறிஞர் தாக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்த சம்பவத்தில் அவர்கள் அமைதியாக இருந்ததாக தோன்றுகிறது. மேலும், அந்த இடத்தில் இருந்த தலைவர் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் பிரச்னையைத் தூண்டினாரா என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறை கைப்பற்றி அதனை ஆய்வு செய்து இரு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க : மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா.. காரணம் இதுவா?
வழக்கின் பின்னணி
வழக்கறிஞர் ராஜீவ் காந்தி இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது அவரது பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பயணித்த கார் இடித்ததாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பிய நிலையில், அங்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலிலிருந்து தப்பிக்க வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பார் கவுன்சில் அலுவலகத்துக்குள் சென்றபோதும், அங்கு இருந்த சில வழக்கறிஞர்கள் அவரை மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் கே. பாலு, பார் கவுன்சில் அலுவலகத்திலேயே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்டுள்ள நிலையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார் கவுன்சில் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, கடலூரை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஒருவர் கே. பாலுவை ஆபாசமாக திட்டியதாகவும், அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கே. பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தன்னை மிரட்டியவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.