AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samagra Shiksha Scheme: தமிழ்நாட்டிற்கு நிதியை ஒதுக்குங்கள்.. மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Central government Funding: சென்னை உயர்நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டிற்கான நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையுடன் இதை இணைக்கத் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 2021 முதல் நிதி வழங்கப்படாததால், மாநில அரசு தனியாக நிதியைச் செலவிட்டதாகவும், மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிதி, சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும்.

Samagra Shiksha Scheme: தமிழ்நாட்டிற்கு நிதியை ஒதுக்குங்கள்.. மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் - சென்னை உயர்நீதிமன்றம்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jun 2025 16:25 PM IST

சென்னை, ஜூன் 10: ஆர்.டி.இ சட்டத்தின் (RTE Act) கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக்கூடாது என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, மத்திய அரசு (Central Govt) வழங்கும் இந்த நிதியை தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

வழக்கு விவரம்:

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோயம்புத்தூரை சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களின் விசாரணையின்போது, அரசியல் விரோதம் காரணமாக 2021 முதல் மத்திய அரசு நிதியை வெளியிடவில்லை என்று தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த திட்டத்தின்கீழ், மத்திய அரசும் மாநில அரசும் நிதியை பகிர்ந்து கொள்கிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில், 60 சதவீத தொகையை மத்திய அரசும், 40 சதவீத தொகையை மாநில அரசும் அந்தந்த பள்ளிகளுக்கு அளிக்கின்றன. ஆனால், 2021 முதல் 2023 வரை மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100 சதவீத நிதியையும் மாநில அரசே வழங்கியது என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலை மை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு:

வாதங்களை கேட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, சமக்ர சிக்‌ஷா திட்டத்திலிருந்து ஆர்.டி.இ சட்டத்தின் கீழ், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி, நிதி வழங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரே நேரத்தில் பொறுப்பேற்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிதியை தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவதோடு இணைக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டிய சமக்ர சிக்‌ஷா திட்ட நிதியை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மேலும், மனுவில் கோரப்பட்ட நிவாரணத்தை பொறுத்தவரை, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவை பின்பற்றி பணம் செலுத்துமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டத்தின் திட்டத்தின் கீழ் சேர்க்கை வழங்கும் தனியார் உதவி பெறாத பள்ளிகளுக்கு மாநில அரசு பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய கடமை உள்ளது என்றும், மத்திய அரசிடமிருந்து நிதி பெறாததை சட்டப்பூர்வ கடமையிலிருந்து தப்பிக்க ஒரு காரணமாக பயன்படுத்த முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

Follow Us