திருவண்ணாமலை மகாதீபம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்; 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபாடு!
Lakhs of Devotees Gather in Tiruvannamalai: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளதை முன்னிட்டு, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, நவ.24: நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திகழும் திருவண்ணாமலையில், கார்த்திகை மகாதீபத் திருநாளையொட்டி இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மகாதீப நிகழ்வைக் காண்பதற்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலையின் நான்கு மாட வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் முழுமையாக நிரம்பிக் காணப்படுகின்றன.
இதையும் படிக்க : “திருவண்ணாமலையில் அதிகாலையில் ஒளிர்ந்த பரணி தீபம்!”.. விண்ணை முட்டிய அரோகரா முழக்கம்!!
14 கிலோமீட்டர் கிரிவலம், நேர்த்திக்கடன்:
மகாதீபத்தைத் தரிசிக்க வரும் பக்தர்கள், 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையை முழுமையாகச் சுற்றி முடித்துவிட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு மகாதீபத்தைக் காண்பதற்காக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களையும் செலுத்தி வருகின்றனர். அப்பகுதியில் விட்டுவிட்டுச் சாரல் மழை பெய்து வந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து கிரிவலப் பாதையில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. பக்தர்களின் ஆன்மிக ஈடுபாடும் உற்சாகமும் இந்தத் திருநாளில் மேலோங்கிக் காணப்படுகிறது.
15,000 காவல்துறையினர் பாதுகாப்பு:
பக்தர்களின் பெருந்திரளான வருகையை முன்னிட்டுத் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 15,000 காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எந்தவித அசம்பாவிதங்களும் குற்றச் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களுக்கான வழிமுறைகளைக் காவல்துறையினர் வழங்கி வருவதுடன், குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் குழந்தைகளைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் உச்சகட்டப் பாதுகாப்பு.. 5,600-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு; மாலையில் மகாதீபம்!!
போக்குவரத்து ஏற்பாடுகளும் மக்கள் கூட்டமும்:
வெளியூர்களுக்குச் செல்வதற்கான பேருந்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், பக்தர்கள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் சாலைகள் முழுவதிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் எங்கும் மக்களின் கூட்டமாகக் காட்சியளிப்பதால், இயல்பாக நடந்து செல்ல முடியாத அளவிற்குப் பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் திரண்டுள்ளது. மாலை நேர மகாதீப தரிசனத்திற்காகப் பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால், நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பூண்டுள்ளது. முன்னதாக, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நாளான இன்று அதிகாலையில் பரணி தீபம் விமர்சையாக ஏற்றப்பட்டது. இரவு முழுவதும் சிறப்புப் பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அதிகாலை 3.15 மணியளவில் பரணி நட்சத்திரத்தை ஒட்டிப் பரணி தீபம் ஏற்றப்பட்டுக் கோயில் பிரகாரம் முழுவதுமாக எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.