Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – காரணம் என்ன?

Teachers’ Protest on Hold : இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதனையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – காரணம் என்ன?
ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Jan 2026 20:23 PM IST

சென்னை, ஜனவரி 31 : இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த 37 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் தற்போது 35,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 20,000 ஆசிரியர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 31க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள். அதன் படி 2009 மே 31 ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.8,370 வழங்கப்படும் நிலையில், 2009 ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கை

ஒரே பதவி, ஒரே பணி என்ற நிலையில் சம்பள வேறுபாடு இருப்பதை கண்டித்து, இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்த சம்பள முரண் சரிசெய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையும் படிக்க : பாமக கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு…மருத்துவர் ச. ராமதாஸ்!

3 பேர் குழு அறிக்கை

இந்த நிலையில், ஜனவரி 31, 2026 அன்று வெளியிட்ட அறிக்கையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இடைநிலை ஆசிரியர்களின் சம்பள பிரச்னை குறித்து அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவின் அறிக்கை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பள முரண்பாடு சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்ப வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 37 நாட்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, அரசின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலும், மாணவர்களின் கல்வி நலன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் எடுக்கப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!

போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு விரைவான மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை ஆசிரியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.