முதல்வர் கொடுத்த உறுதி.. 17 நாட்களாக நீடித்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்!!
Part-time teachers' protest temporarily withdrawn: முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் கோரி, ஜனவரி 8ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, ஜனவரி 25: பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்து வந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த உறுதியின் படி, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று (ஜனவரி 24) ஆளுநர் உரைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்துப் பேசினார். அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு வெளியானது.
மேலும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணி.. பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?
ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்:
அதாவது, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய ஏதுவாக, அதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.




இந்தக் கோரிக்கைகளில், ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன். அதன்படி, அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கக்கூடிய நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார்.
17 நாட்களாக தொடர்ந்த போராட்டம்:
பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் கோரி, ஜனவரி 8ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் படிக்க: பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
போராட்டம் தற்காலிமாக வாபஸ்:
இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பணி நிரந்தரம் கோரி கடந்த 17 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வந்தனர். சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று பேரவையில் முதல்வர் உறுதியளித்திருந்தார். இதையடுத்து, தங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையில், தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.