தங்கத்தில் ரீனியம் உலேகப் பொடி கலப்பது உண்மையா? அப்படி கலந்திருந்தால் என்ன செய்வது.. நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விளக்கம்!
Rhenium Metal Powder Mixing Gold : தமிழகத்தில் தங்கத்தில் உருக்கப்பட்ட ரீனியம் உலோகப் பொடி கலப்பதாக வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வரும் நிலையில், இது தொடர்பாக நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராமன் விளக்கம் அளித்துள்ளார் .
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தில் ரீனியம் உலோகப் பொடி கலப்பதாக வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வந்தது. இதில், சந்தேகம் இருந்தால் வாடிக்கையாளர்கள் நகையை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது: தங்க நகைகளில் ரீனியம் என்ற உலோகப் பொடி கலப்படம் செய்வதாக சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இவை முற்றிலும் வதந்தி என்றும், தொழில்நுட்ப ரீதியாக இது போன்ற கலப்படம் செய்வது சாத்தியம் அற்றது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் தங்க நகைகளில் ரீனியம் உலோகப் பொடி கலக்க முடியாது.
தங்கத்துடன் ரீனியம் உலோகம் கலப்பது சாத்தியமில்லை
இந்த தகவலால் பொதுமக்கள் மற்றும் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தங்கத்துடன் ரீனியம் போன்ற உலோகத்தை சேர்த்து நகை தயாரிப்பதாக கூறப்படுவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும். தங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை கொண்ட உலோகம் ஆகும். இதனுடன் மற்ற உலோகங்களை சேர்த்து நகைகள் தயாரிக்கும் போது, அவற்றின் மதிப்பு, தன்மை, உருகும் வெப்பநிலை, கலக்கும் விகிதம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா முடிவு? விரைவில் கைதாகிறார்!
தங்க நகைகளின் தரம் குறித்த சந்தேகம் இருந்தால்
குறிப்பாக ரீனியம் அதிக உருகு நிலையை கொண்ட உலோகம் என்பதால், சாதாரண தங்க நகை தயாரிப்பு முறையில் அதனைப் பொடியாக கலந்து, தங்கத்தின் தன்மையை மாற்றாமல் நகையாக உருக்குவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. மேலும், தங்கத்தின் தரத்தை உறுதி செய்வதற்கு பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன. எனவே, இது போன்ற வதந்திகளை பொதுமக்களும், நகை வாங்கும் வாடிக்கையாளர்களும் நம்ப வேண்டாம். அதனை நம்பி அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே வாங்கிய தங்க நகைகளின் தரம் குறித்து சந்தேகம் இருந்தால்.
இலவசமாக நகையை பரிசோதித்து கொள்ளலாம்
அருகில் உள்ள நகைக் கடைகளுக்கு நேரில் சென்று அதன் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். தங்க நகை விற்பனையாளர்களும், வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை தீர்த்து, தங்கத்தின் தரம் குறித்த நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மத்தியில் உறுதி செய்ய வேண்டும். தங்கத்தில் கலப்படம் செய்வது தொடர்பாக யாரேனும் கண்டறியப்பட்டால், அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எங்கள் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும். தங்க நகை தொழிலில் மீதும், விற்பனையாளர்கள் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையே பாதுகாப்பது அவசியம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: கதவை தட்டிய சிபிசிஐடி.. அதிர்ந்து போன தூத்துக்குடி இளைஞர்.. சோதனையில் சிக்கிய கிலோ கணக்கிலான தங்கம்!