AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்திற்கு 7 நாட்கள் மழை கியாரண்டி: 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Rain in Tamil Nadu: லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜூன் 29 வரை தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக 16.7 செ.மீ மிக பலத்த மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு 7 நாட்கள் மழை கியாரண்டி: 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
கோப்புப் புகைப்படம்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Jun 2026 13:28 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப் பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வானம் வறண்டே காணப்பட்டது. எனினும், திருவள்ளூர் மாவட்டத்தின் ஊத்துக்கோட்டையில் மிக பலத்த மழையாக 16.7 சென்டிமீட்டர் (167.0 மி.மீ) மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் தேர்வாய் கண்டிகை ஏரி பகுதியில் 8 சென்டிமீட்டரும், புதுக்கோட்டை பெருங்களூரில் 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுவையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதுமின்றி இயல்பான அளவிலேயே வெப்பம் நீடித்தது. அதிகபட்ச வெப்பநிலையாக பாளையங்கோட்டையில் 37.8° செல்சியஸும், சமவெளிப்பகுதி குறைந்தபட்ச வெப்பநிலையாக கோவை விமான நிலையத்தில் 22.4° செல்சியஸும் பதிவாகியுள்ளது. மலைப்பகுதியான உதகமண்டலத்தில் 12.4° செல்சியஸ் என்ற அளவில் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

அடுத்த சில தினங்களுக்கான லேசானது முதல் மிதமான மழை முன்னறிவிப்பு

வளிமண்டல சுழற்சியின் விளைவாக, ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜூன் 25-ஆம் தேதி முதல் மழையின் பரவலாக்கம் சற்று அதிகரித்து, தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 26 மற்றும் 27 தேதிகளுக்கான தீவிர கனமழை எச்சரிக்கை

ஜூன் 26 முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழையின் வேகம் அதிகரிக்கக்கூடும். அன்றைய தினம் நீலகிரி, தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 27-ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி (மலைப்பகுதி), கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜூன் 28 மற்றும் 29 தேதிகளுக்கான நீடித்த மழைப்பொழிவு விவரம்

ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை நீடிக்கும். ஜூன் 28-ஆம் தேதி மேற்குறிப்பிட்ட தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுடன் கூடுதலாக விருதுநகர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 29 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் கனமழை தொடரக்கூடும். ஜூன் 27 வரை ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகபட்ச வெப்பநிலை பெரிய அளவில் மாறாமல், இயல்பான அளவை ஒட்டியே அல்லது இயல்பை விடக் குறைவாகவே இருக்கும் என்பதால் வெயிலின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us