பாமகவும் தேவையில்லை…எம்எல்ஏ பதவியும் தேவையில்லை….ஜி. கே. மணி ஆவேசம்!
PMK Internal Conflict: அன்புமணியும், ராமதாசும் சேர்வதாக இருந்தால், அன்புமணி குறிப்பிடும் துரோகிகள் கட்சியில் இருந்தும், எம்எல்ஏ பதவியில் இருந்து விலகி விடுவதாக கெளரவத் தலைவர் ஜி. கே. மணி தெரிவித்தார். மேலும், பல்வேறு விவகாரங்களை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணி ஊர் ஊராக திரிந்தாலும் மக்கள் செல்வாக்கு கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியும் ஒன்றாக சேர்வதாக கூறினால், அன்புமணி யார் யாரை துரோகிகள் என்று கூறுகிறாரோ, அவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து வெளியேறி விடுவார்கள். என்னையும் துரோகி என்று கூறினால் நானும் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி விடுகிறேன். எனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்கிறேன். எனது குடும்பத்தினரும் கட்சியில் இருந்து நீங்கி விடுவார்கள். பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள சோதனை பாமக தலைவர் அன்புமணியால் ஏற்பட்டதாகும்.
அன்புமணியை அமைச்சர் பதவியில் அமர வைத்தது நான்
எனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருடன் இருப்பவர்கள் கெடுப்பதாகவும், துரோகம் செய்வதாகவும் அன்புமணி கூறியுள்ளார். மருத்துவம் படித்த அன்புமணியை மத்திய அமைச்சர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் ராமதாஸிடம் தெரிவித்தோம். அதற்கு, பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்தபோது எனது குடும்பத்தை சேர்ந்த யாரும் அரசு பதவிக்கு செல்ல மாட்டோம் என்று ராமதாஸ் செய்த சத்தியத்தை எப்படி மீறுவது என்று கோபப்பட்டார்.
மேலும் படிக்க: 2026 சட்டமன்ற தேர்தல்: 3 பேர் கொண்ட குழுவை இறக்கிய பாஜக!




கூட்டணி தொடர்பாக நான் தான் பேச்சு வார்த்தை நடத்துவேன்
பின்னர், அனைவரும் பேசி அவரை சம்மதிக்க வைத்து அன்புமணியே மத்திய அமைச்சர் பதவியில் அமர வைத்தோம். முந்தைய காலங்களில் மு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் கூட்டணி தொடர்பாக நான் தான் பேச்சுவார்த்தை நடத்துவேன். பின்னர் தான், ராமதாஸ் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவார். திமுகவுடன் கூட்டணி அமைத்த போது 7 நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வாங்கி இருந்தோம். அதில், ஒரு ராஜ்யசபா எம்பி பதவியில் ராமதாஸ் அமர வைக்கப்பட்டார். இவ்வாறாக பாமகவுக்கு நான் உழைத்து உள்ளேன்.
அன்புமணிக்கான செல்வாக்கு நான் தான் காரணம்
அன்புமணிக்கு கட்சியில் செல்வாக்கு வேண்டும் என்பதற்காக அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி தம்பிகள் படை என்ற அமைப்பை உருவாக்கி அன்புமணிக்கு செல்வாக்கை உருவாக்கி தந்தோம். ஒரு சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும், பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி என்று வலியுறுத்தி மாநாட்டை நடத்தி இருந்தோம். இப்படி எந்த கெடுதலும் மனதார செய்யாத என்னை துரோகி என்று அன்புமணி கூறுகிறார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “அன்புமணி விருப்ப மனு பெறுவது மோசடி வேலை”.. யாரும் ஏமாற வேண்டாம்.. ராமதாஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு