தமிழகத்தில் SIR பணிகளுக்கான கால அவகாசம் நிறைவு.. 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
Tamil Nadu SIR Update: தமிழகத்தில் சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் SIR பணிகள் நிறைவடைந்த நிலையில், வரைவு பட்டியல் வரும் டிசம்பர் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக (SIR) வழங்கப்பட்ட படிவங்களை திருப்பி ஒப்படைக்கும் கால அவகாசம் நேற்று (டிசம்பர் 11) உடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியானது கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கியது. இதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கினர். அதோடு, படிவங்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில், இந்தப் பணிக்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் படிக்க: தமிழகத்தில் பிறப்பு விகிதம் கடும் சரிவு.. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு.. ஷாக் ரிப்போர்ட்!!
2 முறை கால அவகாசம்:
பின்னர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் படிவங்களை திருப்பி ஒப்படைக்க கூடுதல் ஒரு வார அவகாசம் வழங்கியது. அதன்படி, டிசம்பர் 11ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டன. மேலும், இரண்டாவது முறையாக, படிவங்களை ஒப்படைக்க மேலும் 3 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதனுடன், தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்து கால அவகாசங்களும் நேற்று நிறைவடைந்தன. சென்னை உள்ளிட்ட பல இடங்களில், கடைசி நாளில் படிவங்களை ஒப்படைக்க வாக்காளர்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு காணப்பட்டது.
டிச.19ல் வரைவு வாக்காளர் பட்டியல்:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் 100 சதவீதம் வழங்கப்பட்டு, பெரும்பாலான படிவங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, பதிவேற்றப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வரைவு பட்டியல் வரும் டிசம்பர் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல்:
அதன்பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர், 2026 பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன இபிஎஸ்…அதிருப்தியில் பாஜக…அடுத்த நகர்வு என்ன!
70 லட்சம் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு:
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போது, தமிழகத்தில் சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், இறந்த வாக்காளர்கள் சுமார் 25 லட்சம், நிரந்தரமாக இடம் மாறி சென்றவர்கள் 40 லட்சம், மேலும் இரட்டை பதிவு காரணமாக 5 லட்சம் பேர் என மொத்தமாக 70 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.