தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் SIR பணிகள்.. இன்றே கடைசி நாள்..
SIR Work: வாக்காளர் நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தங்களிடம் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களை வீட்டில் வசிப்பவர்களின் பெயர்களுடன் ஒப்பிட்டு, அதற்கான படிவங்களை வழங்குகின்றனர். அந்தப் படிவங்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் வாக்காளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 14, 2025: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தல் ஆணையம் தரப்பிலும் அதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, நவம்பர் 4, 2025 அன்று இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு மாத காலத்திற்கு, அதாவது டிசம்பர் 4, 2025 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கடைசி நாள் இன்று, அதாவது டிசம்பர் 14, 2025 ஆகும்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் SIR பணிகள்:
பீகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிலை ஏற்படுமா என்ற சூழலில், தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் இந்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதன் காரணமாக, இந்தப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: முதல்வர், துணை முதல்வர் கலந்துக்கொள்ளும் திமுக இளைஞரணி சந்திப்பு.. திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரம்..
அதன்படி, வாக்காளர் நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தங்களிடம் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களை வீட்டில் வசிப்பவர்களின் பெயர்களுடன் ஒப்பிட்டு, அதற்கான படிவங்களை வழங்குகின்றனர். அந்தப் படிவங்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் வாக்காளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
97% பணிகள் நிறைவு:
இந்தப் படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால், வாக்காளர் நிலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர் நிலை அலுவலர்கள் உதவுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் இந்தப் படிவங்கள் மக்களிடம் வழங்கப்பட்டு, திரும்பப் பெறும் பணிகள் 97 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் பிறப்பு விகிதம் கடும் சரிவு.. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு.. ஷாக் ரிப்போர்ட்!!
இந்தப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க முடியாதவர்கள், ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2002 மற்றும் 2005 காலகட்டங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்றே கடைசி நாள்:
இந்தப் பணிகளில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இன்று அதற்கான கடைசி நாள் என்பதால், வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு இன்று இறுதி நாளாகும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்:
இதனை தவறவிடும் வாக்காளர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்தப் பணிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வரக்கூடிய டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.