தமிழகத்தில் குளிர் நடுங்க வைக்கும், மழையும் இருக்கு.. வானிலை மையம் அலர்ட்!!
Tamil Nadu weather: நாளை டிசம்பர் 16 மற்றும் நாளை மறுநாள் டிசம்பர் 17ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, டிசம்பர் 15: கடலோர தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே, கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களிலும், அதிகாலை வேளைகளிலும் பனிமூட்டம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. அந்தவகையில், சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் வெப்பநிலை 18-21 டிகிரி அளவிற்கு குறைந்து காணப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறியுள்ளது.
அதேசமயம், நாளையும் (டிச.16) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
வட தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு:
அதைத்தொடர்ந்து, டிச.17ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 18ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க: அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..
சென்னையில் பனிமூட்டம் தொடரும்:
சென்னை மற்றும் புறுநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.