Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சில்லென மாறிய தமிழகம்.. அதிகாலையில் கொட்டும் பனி.. வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்திருந்தாலும், அதிகாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கடும் பனி நிலவத் தொடங்கியுள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் (0) டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லென மாறிய தமிழகம்.. அதிகாலையில் கொட்டும் பனி.. வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Dec 2025 06:32 AM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 14, 2025: தமிழகத்தில் டிசம்பர் 14, 2025 அன்று கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது லேசான அல்லது மிதமான மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தை எடுத்துக் கொண்டால், நாகை, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், இன்றும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை இருக்கக்கூடும் என்றும், ஏனைய தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15, 2025 தேதியான நாளை, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்திய கடற்படை மாரத்தான் 2025.. அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கம்..

அதிகாலையில் கொட்டும் பனி:

தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்திருந்தாலும், அதிகாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கடும் பனி நிலவத் தொடங்கியுள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் (0) டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏனைய தமிழக பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது.

3 டிகிரி வரை குறையும் வெப்பநிலை:

இந்த சூழலில், தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மழையின் தீவிரம் குறைந்தாலும், பனிமூட்டத்தின் காரணமாக வெப்பநிலையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், உதகையில் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும், கொடைக்கானலில் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.