காதல் விவகாரம்.. பெண் காவல் ஆய்வாளர் விபரீத முடிவு.. பரிதவிக்கும் குழந்தைகளால் சோகம்!!
Tragedy incident in chennai: காதல் விவகாரம் காரணமாக ஏற்கனவே தந்தையிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த இரண்டு குழந்தைகளை தனியாக தவிக்க விட்டு பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், சென்னை அம்பத்தூர் பகுதயிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, டிசம்பர் 15: சென்னை அம்பத்தூரில் பணியாற்றி வந்த பெண் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது இரண்டு சிறுவர்கள் தாயை இழந்து தவித்து வருகின்றனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தற்கொலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், அவர் மற்றொரு துணை காவல் ஆய்வாளர் ஒருவருடன் காதலிலும் இருந்து வந்துள்ளார். இதனிடையே, அந்த உறவில் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டதாக தெரிகிற்து. இதனால், அவரையும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்தாரா என்று விசாரணை நடந்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: தமிழகத்தில் பிறப்பு விகிதம் கடும் சரிவு.. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு.. ஷாக் ரிப்போர்ட்!!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அந்தோணி மாதா:
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அந்தோணி மாதா (31). விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு யோவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து, அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வீடு எடுத்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 2021-ம் ஆண்டு காவல் துறையில் துணை காவல் ஆய்வாளர் பணியில் சேர்ந்தார்.




ஆண் துணை காவல் ஆய்வாளருடன் காதல்:
பணியில் சேர்ந்த பிறகு, அதே காவல் துறையைச் சேர்ந்த ஒரு ஆண் துணை காவல் ஆய்வாளருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், சமீப காலமாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த ஆண் துணை காவல் ஆய்வார் தொடர்பை குறைத்ததாக தெரிகிறது. இதனால், அந்தோணி மாதா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன உளைச்சலில் அந்தோனி மாதா:
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு (சனிக்கிழமை) அந்தோணி மாதா அந்த ஆண் காவலருன் செல்போனில் வீடியோ அழைப்பில் பேசினார். உடனடியாக தன்னை சந்திக்க வருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் வர இயலாது என கூறியதாக தெரிகிறது. அதன் பிறகு அந்தோணி மாதா அவரிடம் மன உளைச்சலை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தோணி மாதாவை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், சந்தேகமடைந்த அந்த ஆண் காவல் ஆய்வாளர், அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் அந்தோணி மாதாவின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தார்.
மேலும் படிக்க: ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன இபிஎஸ்…அதிருப்தியில் பாஜக…அடுத்த நகர்வு என்ன!
பரிதவிக்கும் குழந்தைகளால் சோகம்:
இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரம் காரணமாக ஏற்கனவே தந்தையிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த இரண்டு குழந்தைகளை தனியாக தவிக்க விட்டு பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)