கத்தரிக்கோல் முனையில் சிறுமி மிரட்டல்… அரசு மருத்துவமனையில் பரபரப்பு!
Chengalpattu: செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், சிகிச்சைக்காக வந்த ஏழு வயது சிறுமியின் கழுத்தில் கத்திரிக்கோலை வைத்து ஒரு இளைஞர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் என்கிற அந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மிரட்டப்பட்ட காட்சி
செங்கல்பட்டு, செப்டம்பர் 19: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த சிறுமியின் கழுத்தில் கத்திரிக்கோலை வைத்து இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மேலகண்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரின் ஏழு வயது மகள் யாஷிகாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியை தமிழரசி பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு நேற்று (செப்டம்பர் 18) அழைத்து வந்துள்ளார். சிறுமியை மருத்துவரிடம் காட்டிவிட்டு அங்கிருந்த காத்திருப்பாளர் பகுதியில் தமிழரசி குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.
கழுத்தில் கத்திரிக்கோல் வைத்து மிரட்டல்
இதற்கிடையில் சிறுகுன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதேரி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மணிகண்டன் சிறுமி யாஷிகாவை பிடித்து இழுத்து அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து அவரது கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். யாராவது அருகில் வந்தால் குத்தி விடுவேன் என மிரட்டினார்.
Also Read: முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!
இதனால் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் சிறுமியின் தாயான தமிழரசு விழிபிதுங்கி நின்றார். உடனே அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரிடம் சிறுமியை விட்டு விடுமாறு கெஞ்சினர். ஆனால் மணிகண்டன் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார்.
இதனால் நிலைமையை சமாளிக்க அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனை லாவகமாக பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வதால் அவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டாரா? அல்லது கஞ்சா போன்ற போதை பொருள் உபயோகித்தால் இப்படி நடந்து கொண்டாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமி யாஷிகா கழுத்தில் கத்திரிக்கோல் வைத்து மணிகண்டன் மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மனைவியுடன் வேறுநபர்.. இருவரையும் தலை துண்டித்து கொன்ற கணவர்!
பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுகோள்
பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் போதைப்பொருட்களால் இளம் வயதினர் அடிமையாவதை தடுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனால் குற்ற செயல்கள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்