Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“உங்கள விடமாட்டோம்” நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி.. மதுரை கோர்டில் பரபரப்பு!

கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மதுரை நீதிமன்ற வளாகத்தில் இரண்டு பேர் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரத்தம் வடிந்தபடி, நீதிபதிக்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

“உங்கள விடமாட்டோம்” நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி.. மதுரை கோர்டில் பரபரப்பு!
நீதிபதிக்கு கொலை மிரட்டல்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Apr 2025 10:59 AM IST

மதுரை, ஏப்ரல் 25:  மதுரை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிக்கு கைதி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள  கண்ணாடியை உடைத்து ரத்தம் சொட்ட சொட்ட நீதிபதிக்கு கைதி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கஞ்சா வழக்கில் அந்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து,  மிரட்டியுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு மதுரை கீரைத்துறை பகுதியில் கஞ்சா பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து மதுரை மாநகர போலீசார் சோதனையிட்டனர்.

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி

அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றுக் கொண்டிருந்த முரட்டாம்பத்திரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், அவரது சகோதரர் பிரசாந்த், மனைவி சரண்யா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் 25 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாக தெரியவந்தது.

இதனை அடுத்து, கீரைத்துறை போலீசார் மூன்று பேரை கைது செய்துஅவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கஞ்சா எப்படி வந்தது என்பது குறித்து மூன்று பேரிடம் விசாரித்தனர். அப்போது, ரவடி வெள்ளை காளியின் அண்ணன் மகன் சண்முகவேல் 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்கும்படி கூறியதாக வாக்குமூலம் அளித்தனர்.

இதனை அடுத்து, சண்முகவேலை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே, பாண்டியராஜன், பிரசாந்த், சரண்யா ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு மதுரை மாவட்ட போதைப் பொருள் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்ததது. இந்த வழக்கை நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமார் விசாரணை நடத்தி வந்தார்.

மதுரை  நீதிமன்றத்தில் பரபரப்பு

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு 2025 ஏப்ரல் 24ஆம் தேதி வழங்கப்பட்டது. பாண்டியராஜன், பிரசாந்த், சரண்யா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மூன்று பேருக்கும் தலா 12 ஆண்டுகளும் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பு வழங்கினார்.

நீதிமன்றத்தின் உத்தரவை கேட்ட பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திலேயே ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து, ரத்தம் வடிந்தபடி இருவரும் ரகளையில் ஈடுபட்டனர்.

அதோடு,  தண்டனை விதித்த நீதிபதிக்கு கொலை மிரட்டளும் விதித்துள்ளனர். நீதிபதியை கொலை செய்யாமல் விடமாட்டோம் என தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இருவரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.