“அதிமுகவிலும் குடும்ப அரசியல்”.. இபிஎஸ் குறித்த செங்கோட்டையன் சொன்ன பகீர் தகவல்!!
Family politics in AIADMK: அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டது முதல் எடப்பாடி பழனசாமி மீது அடுக்கடுக்காக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டி வருகிறார். அதிமுகவின் தொடர் தோல்வி, கோடநாடு என பல விவகாரங்களுக்கு பின்னணியில் அவர் உள்ளதாக வெளிப்படையாக கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார்.
கோவை, நவம்பர் 03: திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடுகள் கட்சியில் உள்ளதாக பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரை அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றே தான் பணியாற்றுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கட்சியில் நீக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் தேவர் ஜெயந்தியன்று, அக்கட்சியன் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒன்றாக சென்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதோடு, கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்றும் கடுகடுத்தார். 50 வருடங்களுக்கு மேல் கட்சியில் பயணித்த மூத்த தலைவரை ஒரே நாளில் நீக்கியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன.
கோடநாடு வழக்கில் இபிஎஸ் A1:
இதனிடையே, கட்சியில் இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி குறித்து எந்த குற்றச்சாட்டுகளையும் முன் வைக்காத செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கியவுடன் கோடநாடு கொலை வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய்திறக்க மறுப்பதாகவும், கோடநாடு வழக்கில் அவரே A1 என்றும், அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியின் தொடர் தோல்விகளுக்கு அவரே காரணம் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பினார். இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கேள்வி எழுந்த நிலையில், இன்று அவர் சென்னை வருகை தந்துள்ளார்.
அதிமுகவிலும் குடும்ப அரசியல்:
இதையொட்டி, கோவை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆர் காலத்தில் இருந்து தான் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறினார். மேலும், ஒன்றன் பின் ஒன்றாக வரும் பிரச்னைகளை பார்த்தால், திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளதாகவும், அதிமுக பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடுகள் கட்சியில் உள்ளது என்பது நாடறிந்த உண்மை என்று அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.



