Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் நாளை இந்த புறநகர் ரயில்கள் ரத்து – எந்தெந்த வழித்தடத்தில் ரயில் இயங்காது?

Chennai Train Update : சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புற நகர் ரயில் சேவைகள் டிசம்பர் 28, 2025 நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்ற விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை இந்த புறநகர் ரயில்கள் ரத்து – எந்தெந்த வழித்தடத்தில் ரயில் இயங்காது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Dec 2025 16:54 PM IST

சென்னை, டிசம்பர் 27: சென்னையில் (Chennai) குறைந்த கட்டணத்தில் விரைவாக ஒரு இடத்திற்கு செல்ல மின்சார ரயில்களை (Train) மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் டிராஃபிக் போன்ற சிக்கல்கள் இல்லாமல் பயணிக்க முடியும் என்பதால் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் இந்த மின்சார ரயில்களை பயன்படுத்துகின்றனர். பேருந்துகளை விட இதில் கட்டணம் குறைவு என்பதால் மக்களின் விருப்ப தேர்வாக மின்சார ரயில்கள் இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயில் பயணிகளை பாதிக்கும் வகையில், டிசம்பர் 28, 2025 நாளை சில வழித்தடங்களில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களின் விவரம்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் வழித்தடத்தில், மீஞ்சூர் மற்றும் அத்திப்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக டிசம்பர் 28, 2025 நாளை சில குறிப்பிட்ட மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதையும் படிக்க : இது இருந்தால் தான் படிவம் 6 ஏற்றுக்கொள்ளப்படும்.. புதிய வாக்காளர்கள் சந்திக்கும் சிக்கல்..

அதன்படி, நாளை காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.55 மணி மற்றும் 11.25 மணிக்கு புறப்படவிருந்த மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், நாளை காலை 9.40 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 10.55 மணிக்கு புறப்படவிருந்த மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஊட்டியில் 4 டிகிரி செல்சியஸ்.. தொடரும் உறைபனி.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?

இந்த ரத்து அறிவிப்பால், சென்னை வடக்கு புறநகர் பகுதிகளைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன், ரயில் நேர அட்டவணை மற்றும் சேவை நிலவரத்தை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.