புத்தாண்டு கொண்டாட்டம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை… புதுச்சேரி அரசு விதித்த கட்டுப்பாடுகள்
New Year Celebration: 2026 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் அதனை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தான் புதுச்சேரி அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுச்சேரி, டிசம்பர் 26: 2026 ஆம் ஆண்டு துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மக்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் புத்தாண்டு (New Year) கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி (Puducherry) கடற்கரைகளில் குவிவது வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதார காரணங்களை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு தினத்தில், புதுச்சேரி கடற்கரைக்கு பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்பூர் சாலை மற்றும் செஞ்சி சாலை வழியாக புதுச்சேரி கடற்கரைக்கு எந்தவிதமான வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பிரியாணியோடு திருப்பரங்குன்றம் மலையேற முயன்ற கேரள முஸ்லீம்கள்- தடுத்து நிறுத்திய போலீசார் – பரபரப்பு தகவல்




பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, புதுச்சேரி முழுவதும் 1,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என கூறப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலத்தில் பறவைக் காச்சல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, புதுச்சேரி கடலோர பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்திய கடலோர காவல்படை பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி கடலோர பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது, போதிய அளவில் பயிற்சி பெற்ற லைஃப் கார்டுகள் நியமிக்கப்பட வேண்டும் என கடலோர காவல் படை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : தமிழக சட்டப்பேரவை ஜன.20-இல் கூடுகிறது…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!
அத்துடன், லைஃப் ஜாக்கெட்கள், கையிறுகள், எச்சரிக்கை அறிவிப்புகளுக்கான மெகாபோன்கள், முழுமையான வசதிகளுடன் கூடிய முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவற்றை எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியுமாறு ஒளி பிரதிபலிக்கும் ஜாக்கெட்கள் அணிய வேண்டும் என்றும், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கூட்டத்தை கண்காணிக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும் என்றும் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
இந்த கோபுரங்களில் இருந்து பைனாக்குலர்கள் மூலம் கடற்கரை மற்றும் கடற்கரைப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறையின் அனுமதி இல்லாமல் படகுகள் மற்றும் குரூஸ் கப்பல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.