ஊருக்கு போறீங்களா? தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களின் நேரம் மாற்றம் – எப்போ தெரியுமா?
Southern Railway: உலகின் மிக நீண்ட ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை, டிசம்பர் 26: வருகிற 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு (New Year) முதல் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில்களின் (Train) நேரங்களில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றம், 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் முக்கிய ரயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், கொல்லம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நெல்லை எக்ஸ்பிரஸ்
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூர் வரை தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12632, தற்போது இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு வருகிறது. இதனையடுத்து புதிய அறிவிப்பின்படி, ஜனவரி 1, 2026 முதல் இந்த ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.50 மணிக்கு புறப்படும்.
இந்த ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழக சட்டப்பேரவை ஜன.20-இல் கூடுகிறது…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!




பொதிகை எக்ஸ்பிரஸ்
செங்கோட்டை முதல் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12662, தற்போது தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்படுகிறது. புதிய நேர அட்டவணையின் படி, ஜனவரி 1, 2026 முதல் இந்த ரயில் 5 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.50 மணிக்கு புறப்படும். மேலும், வழக்கத்தை விட முன்பாக, மறுநாள் காலை 5.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்துநகர் எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடி முதல் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12694, தற்போது இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு வருகிறது. இது வருகிற ஜனவரி 1, 2026 புத்தாண்டு முதல், இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாக இரவு 9.05 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் கடும் பனிப் பொழிவு.. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பனி அலெர்ட் இதோ!
கொல்லம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ்
செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16102 ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி
தற்போது காலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் இந்த ரயில், ஜனவரி 1, 2026 முதல் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் முன்னதாக காலை 6.05 மணிக்கே தாம்பரம் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றங்களால் பயண நேரம் குறைவதுடன், பயணிகள் வசதி மேம்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ரயில் நேர அட்டவணையை பயணிகள் முன்கூட்டியே சரிபார்த்து, ரயில் புறப்படும் நேரத்திற்கு முன்பாக நிலையங்களுக்கு வருமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.