பிரசாரச் செலவு வரம்பை மீறிய தவெக வேட்பாளர்கள்?.. தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!!
TVK Candidates Election Commission Complaint: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றித் கழக (தவெக) வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த செலவு வரம்பை மீறி பல கோடி ரூபாய் அதிகமாகச் செலவிட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் வழக்கறிஞர் அமலன் புகார் அளித்துள்ளார். விதியை மீறிய தவெக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர், 05: தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த இடைத்தேர்தல் களத்தில் தமிழக வெற்றித் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இரண்டு நாட்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் அவர் மேற்கொண்ட பிரசாரத்தின் போது செய்யப்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடுகளும், அதற்காகச் செய்யப்பட்டப் பிரசாரச் செலவுகளும் தற்போது தேர்தல் களத்தில் மிகப்பெரிய சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன.
இதையும் படிக்க: “தெருத்தெருவாக பிரசாரம் செய்வதற்கு தோல்வி பயமே காரணம்!”.. முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!!
பல கோடி ரூபாய் பிரசாரச் செலவு:
மதுரை மேலூரைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அமலன் என்பவர், தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அவசரப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட இரண்டு நாட்களிலும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் சேர்த்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்டமான தடுப்புகள் (பேரிகாடுகள்) அமைக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மிக உயரமான ராட்சதக் கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்ததாகவும், பிற மாவட்டங்கள் மற்றும் ஊர்களிலிருந்து லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஆட்கள் பிரசாரத்திற்காக வரவழைக்கப்பட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய செலவு வரம்பு மீறல் குற்றச்சாட்டு:
தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி ஒரு பேரிகாட்டிற்கு நாளொன்றுக்கு ரூ.170 வாடகை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், 80 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட பேரிகாடுகளுக்கே பல லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இது தவிர தாரை தப்பட்டை, பிரம்மாண்ட மாலைகள், வாணவேடிக்கை மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்காகத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்காமல் தவெக வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஒரு வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் மட்டுமே பிரசாரச் செலவு வரம்பாக நிர்ணயித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர்கள் விதிகளை முற்றிலும் மீறி பல மடங்கு அதிகமாகச் செலவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க : தவெக மைனாரிட்டி அரசுக்கு தக்க பதிலடி – தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்
தேர்தல் ஆணையத்தின் வீடியோ ஆய்வு:
தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக் குழுவினர் பிரசாரத்தின் போது எடுத்த வீடியோ பதிவுகளையும் ஆய்வுகளையும் முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என வழக்கறிஞர் மனுவில் வலியுறுத்தியுள்ளார். அந்த வீடியோ பதிவுகளின் அடிப்படையில் பிரசாரத்திற்குச் செய்யப்பட்ட உண்மையான செலவினங்களைக் கணக்கிட்டு, அதனை இரு தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு சேர்க்கும் போது, தேர்தல் ஆணையம் அனுமதித்த ரூ.40 லட்சம் வரம்பை விடப் பல மடங்கு தொகை அதிகரிக்கும் என்பதால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய தவெக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது அவசர மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.