தவெகவுக்கு விசில் சின்னம் – தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு – கைகொடுக்குமா வி சென்டிமென்ட்?
Whistle Symbol for TVK : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியது. இந்த நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தவெக விசில் சின்னத்தில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்ப்டடுள்ளது.

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
சென்னை, ஜனவரி 22 : விஜய்யின் (Vijay) தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியது. இந்த நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தவெக விசில் சின்னத்தில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது. தவெக சார்பில் விசில் சின்னம் கேட்கப்பட்டிருந்த நிலையில், மற்ற கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விசில் சின்னமே கிடைத்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் அடையாளமாக ‘விசில்’ சின்னம் அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான சின்னமாக ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் டெல்லியில் முகாமிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தலில் பயன்படுத்தக் கூடிய வகையில் 190 சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு விருப்பமான 10 சின்னங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த மேலும் சில கட்சிகள்.. பியூஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பு..
இந்த நடைமுறையின்படி, தவெக தனது முதல் விருப்பமாக விசில் சின்னத்தையும், மாற்று விருப்பங்களாக ஆட்டோ மற்றும் கிரிக்கெட் பேட் சின்னங்களையும் கோரியது. தற்போது, தவெக தாக்கல் செய்த கணக்குகள் மற்றும் ஆவணங்கள் தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதால், கட்சிக்கு ‘விசில்’ சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் வி சென்டிமென்ட்
இந்த விசில் சின்னம் நடிகர் விஜயின் பெயரிலுள்ள ‘V’ என்ற எழுத்தை பிரதிபலிப்பதாகவும் பார்க்கப்படுகிறது. கட்சியின் பெயரிலேயே வெற்றி என்ற சொல்லை இணைத்துள்ள விஜய், தனது அரசியல் பயணத்திலும் வி என்ற எழுத்தை முன்னிலைப்படுத்தி வருகிறார். அதே வி சென்டிமென்ட் தற்போது கட்சியின் சின்னத்திலும் வெளிப்படுவதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக கட்சியின் முதல் மாநில மாநாடு விருதாச்சலத்தில் உள்ள வி சாலை என்ற பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வி சென்டிமென்ட், தேர்தலில் விஜய்க்கு வெற்றியைத் தருமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க : ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..
இதேவேளையில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ஏற்கனவே பயன்படுத்தி வந்த ‘டார்ச் லைட்’ சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. புதிய அரசியல் கட்சிகளும், பழைய கட்சிகளும் தத்தமது சின்னங்களுடன் களமிறங்கும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.