சித்திரை திருவிழா.. “ஓம் நமச்சிவாய” கோஷத்துடன் அசைந்து வந்த தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்!
Thanjavur Brihadeeswarar Temple Chariot : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, திருத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் பெரிய கோயிலில் கடந்த ஏப்ரல் 13- ஆம் தேதி ( திங்கள்கிழமை) சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கலை நாட்டிய நிகழ்ச்சிகள், சுவாமிகள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வகையில், இன்று திங்கள்கிழமை காலை தஞ்சை பெரிய கோவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடபெற்றது. இதைத் தொடர்ந்து, அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி, கமலம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. திருத் தேரோட்டத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அப்போது, சிவமேளங்கள் முழங்க, தாரை தப்பட்டை மேளங்களோடு தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
முக்கிய வீதிகள் வழியாக அசைந்து வந்த தேர்
தேரோட்டமானது தஞ்சை மேல வீதியில் காலை 6.30 மணிக்கு தொடங்கிய நிலையில், வடக்கு வீதி, ரத்தினபுரீஸ்வரர் கோவில், கீழவீதி தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு ராஜ வீதிகள் வழியாக வந்து மீண்டும் மேல வீதியில் காலை 10 மணிக்கு தனது நிலையை வந்தடைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தேரானது 13 நிலைகளில் நின்று சென்று பக்தர்கள் பூஜைகள் செய்வதற்கும் சுவாமி தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தேரானது சுமார் 19 அடி உயரமும். 15 அடி அகலமும், 43 டன் எடையும் உடையதாகும். இந்த தேரில் 35 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நந்தி வாயிலிருந்து வழியும் தீர்த்தம்: பெங்களூருவின் அதிசய தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
இந்த விழாவுக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழாவையொட்டி, அந்த பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோடை காலம் என்பதால் பக்தர்களுக்கு பல்வேறு பகுதிகளில் குடிநீர் வசதி, மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேர் செல்லும் வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தரிசனம்
மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் மற்றும் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழு, மாநகராட்சி ஊழியர்கள், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தீயணைப்பு படை வீரர்கள், உள்ளிட்டோர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விழாவில், தஞ்சாவூர் மாவட்டம் மட்டும் இன்றி திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
மேலும் படிக்க: சித்ரா பௌர்ணமி 2026.. வீட்டிலேயே செய்ய வேண்டிய எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாடு!!



