கிளாண்டர்ஸ் நோய்த்தொற்று.. தமிழகம் முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு..
கிளாண்டர்ஸ் என்பது குதிரைகள் மற்றும் கழுதைகளுக்கு பரவும் பாக்டீரியா நோயாகும். இது விலங்குகளுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் பரவக்கூடியது. இந்த நோய் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ள சூழலில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மே 18, 2026: தமிழகத்தில் குதிரைகள் மத்தியில் கிளாண்டர்ஸ் (Glanders) பாக்டீரியா பரவல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக சுற்றுலாத் தளங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஒரு குதிரை உயிரிழந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்த குதிரைக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குதிரை சவாரிக்கு கட்டுப்பாடுகள்:
இந்த சூழலில், பாக்டீரியா பரவல் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கடற்கரை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தளங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான குதிரை சவாரிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி மட்டுமே குதிரை சவாரி மேற்கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
பாக்டீரியா பரவல் காரணமாக உடல்நலக்குறைவு உள்ள குதிரைகள் சவாரிக்குப் பயன்படுத்தக்கூடாது என்றும், குதிரைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி, தோல் பாதிப்பு, சுவாசக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சவாரி நடத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளாண்டர்ஸ் தொற்று:
நேற்று முன்தினம் சென்னையில் ஒரு குதிரைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. உடனடியாக கால்நடைத் துறை மருத்துவர்கள் அந்த குதிரையை பரிசோதனை செய்தபோது, கிளாண்டர்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த குதிரையுடன் தொடர்பில் இருந்த மற்ற குதிரைகள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவற்றிற்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த சூழலில், சைதாப்பேட்டையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையின் நோய் நிகழ்வியல் பிரிவு மருத்துவக் குழுவினர் கிட்டத்தட்ட 140 குதிரைகளிடமிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பியுள்ளனர். ரத்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரமாகும் கண்காணிப்பு பணிகள்:
கிளாண்டர்ஸ் என்பது குதிரைகள் மற்றும் கழுதைகளுக்கு பரவும் பாக்டீரியா நோயாகும். இது விலங்குகளுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் பரவக்கூடியது. இந்த நோய் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?.. தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ள சூழலில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குதிரைகள் பராமரிக்கப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், விலங்குகளுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளாண்டர்ஸ் நோய் தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் கால்நடைகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட கால்நடைத் துறைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.