காவல் நிலையம் அருகே பட்டாகத்தியுடன் ரகளை.. எஸ்.ஐ.-யை வெட்ட முயன்ற போதை வாலிபர்.. அதிர்ச்சி வீடியோ!!
Drunk Youth Tries to Attack: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் காவல் நிலையம் அருகே பட்டாகத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மதுபோதை இளைஞர், தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ பெல்ட்டைக் கழற்றி தற்காத்துக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.06: பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் இரவு பகலாகப் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகச் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் மதுபோதையில் ஆயுதங்களுடன் சுற்றும் நபர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே, பட்டாகத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர், அதைத் தட்டிக்கேட்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: திருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் மலை ஏறத் தடை! மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அதிரடி அறிவிப்பு!
காவல் உதவி ஆய்வாளர் மீது கத்திவீச்சு முயற்சி:
செங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே வாலிபர் ஒருவர் கையில் பட்டாகத்தியை வைத்துக்கொண்டு மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வருவதாகச் செங்குன்றம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்தவுடன், காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர் ஒருவர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த இளைஞரைச் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்த முயன்றதுடன், விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களுடன் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து எதிர்பாராதவிதமாக உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை நோக்கி வெட்டப் பாய்ந்துள்ளார்.
பெல்ட்டைக் கழற்றித் தற்காப்பு:
கத்தியுடன் தன்னை தாக்க வந்ததைக் கண்டு சற்றும் பதற்றமடையாத உதவி ஆய்வாளர் செந்தில்குமார், உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு தான் அணிந்திருந்த சீருடை பெல்ட்டைக் கழற்றி, அந்த இளைஞனின் கத்திவீச்சில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டார். அதன்பின்னர், கூடுதல் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த பொதுமக்களின் துணிச்சலான உதவியுடன் பட்டாகத்தியை வைத்திருந்த இளைஞரை மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டவர் செங்குன்றத்தைச் சேர்ந்த தினேஷ் என்பதும், அவர் தீவிர மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதையும் படிக்க: மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி கோர விபத்து.. 3 பெண்கள் உடல் நசுங்கி பலி!
தாக்குதல் முயற்சி வீடியோ வெளியீடு:
செங்குன்றம் காவல் நிலையத்தின் மிக அருகிலேயே, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிறுத்தத்தில் காவல் உதவி ஆய்வாளரையே பட்டாகத்தியால் வெட்ட முயன்ற இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தனது பெல்ட்டைக் கழற்றிப் போதை வாலிபரின் கத்தித் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.