திருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் மலை ஏறத் தடை! மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அதிரடி அறிவிப்பு!
Tiruvannamalai Karthigai Deepam: வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக மகா தீபம் ஏற்றப்படும் நாளில் பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மலை ஏறுவதற்குத் தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறி மலை மீது ஏறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 6, 2026: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் நாளில் பக்தர்கள் மலை மீது ஏறத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை காரணமாக பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி மலை மீது ஏறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். குறிப்பாக, கார்த்திகை தீபத் திருநாளன்று கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதைக் காண்பதற்காகப் பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் படிக்க: மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி கோர விபத்து.. 3 பெண்கள் உடல் நசுங்கி பலி!
இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நவம்பர் 24ஆம் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பு
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் வளாகத்தைச் சுத்தப்படுத்துதல், கோபுரங்களைச் சுத்தம் செய்தல், வண்ண விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 11 வரை கனமழைக்கு வாய்ப்பு..
இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
மலை ஏற பக்தர்களுக்குத் தடை!
அப்போது, வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக மகா தீபம் ஏற்றப்படும் நாளில் பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மலை ஏறுவதற்குத் தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறி மலை மீது ஏறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதேபோல், பருவதமலை மீதும் பக்தர்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கூடுதல் பேருந்துகள், ரயில்கள் இயக்கம்
பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவீதம் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், கிரிவலப் பாதை முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. இதுதவிர, 12 குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.