மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி கோர விபத்து.. 3 பெண்கள் உடல் நசுங்கி பலி!
ECR road accident: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) சாலையில் மாடு குறுக்கே வந்ததால் தனியார் நிறுவனப் பெண் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு, நவ.06: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து மற்றும் சாலை விபத்துகள் பொதுமக்களைப் பெரும் கவலைக்குள்ளாக்கி வருகின்றன. குறிப்பாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) அதிகாலை வேளையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மாமல்லபுரம் அருகே உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற கோர விபத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: வழிப்பறி வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோட்டம்.. சென்னையில் பரபரப்பு!
கட்டுப்பாட்டை இழந்த வேன்:
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே உள்ள பெருந்தூர் கிராமத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான வேன் ஒன்று சுமார் 20 பெண் ஊழியர்களை ஏற்றிச் கொண்டு கேளம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வேன் பயানூர் பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராதவிதமாகச் சாலையில் மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய வேன் ஓட்டுநர், வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்ற அந்த வேன், தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதியுள்ளது.
சம்பவ இடத்திலேயே மூவர் பலி:
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த மற்ற பெண் ஊழியர்கள் பலரும் பலத்த காயங்களுடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி அலறினர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: “சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு 70,000 புதிய வீடுகள்”.. ‘வெற்றி வீடு’ திட்டத்திற்குத் தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சாலைப் பாதுகாப்பு குறித்த கவலை:
விபத்து குறித்துத் தகவல் அறிந்த மாமல்லபுரம் காவல் நிலைய போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை வேளையில் சாலைகளில் மாடுகள் உலா வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் தொடரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க கடும் விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.