காங்கிரஸ் எதிர்பார்க்கும் 40 தொகுதிகள்…திமுகவின் நிலைப்பாடு என்ன!
DMK How Many Seats will Give Congress: திமுகவிடம் காங்கிரஸ் கட்சி 40 சட்டமன்ற தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில், அந்தக் கட்சி எத்தனை தொகுதிகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள்
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கால சூழ்நிலை நெருங்கி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளையும் தேர்தல் அச்சம் தொற்றியுள்ளது. ஆளும் கட்சிக்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம். எதிர்க் கட்சிக்கு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம். மற்ற கட்சிகளுக்கு தாம் ஆட்சி அரியணையில் ஏறி விட மாட்டோமா என்ற எண்ணம் என அனைத்து தரப்பு கட்சிகளும் தங்களுக்கான வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் முன்பே பல்வேறு கட்சிகள் தங்களுடைய தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்டவை குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கத் தொடங்கி விட்டன.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம்
அதன்படி, தொகுதி பங்கீடு விவகாரம் அதிகமாக எழுப்பப்பட்ட கட்சியாக திமுகவே உள்ளது. ஏனென்றால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி விட்டன. இவர்களைப் போல காங்கிரஸ் கட்சியும் தனக்கு கூடுதல் தொகுதிகள், அதாவது சுமார் 40 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவிடம் வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ. 1,020 கோடி ஊழல்.. அமைச்சர் கே.என் நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. டிஜிபிக்கு கடிதம் அனுப்பிய அமலாக்கத்துறை
தொகுதி பங்கீடு குறித்து முதல்வரை சந்தித்த ஐவர் குழு
அதன் அடிப்படையிலேயே, அண்மையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐவர் குழு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தியதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், தி மு க விடம் காங்கிரஸ் 40 தொகுதிகள் கேட்டதாக அந்த கட்சி வெளியே தகவல் தெரிவித்ததால், திமுக தலைமை கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், திமுக- காங்கிரஸ் கட்சியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திமுகவிடம் காங்கிரஸ் கட்சி பெற்ற தொகுதிகள்
இந்த நிலையில், கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளின் அடிப்படையில் பார்த்தால், கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 80 தொகுதிகளை கேட்டு 63 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெற்றது. இதைத் தொடர்ந்து 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 60 தொகுதிகளை கேட்டு 40 தொகுதிகளை பெற்றிருந்தது. 2021- சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளை கேட்டு 25 தொகுதிகளை திமுக அளித்திருந்தது. ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளில் 15 முதல் 20 தொகுதிகள் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக அளிக்கும் தொகுதிகள் எவ்வளவு
இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கு குறையாமல் கேட்டுப் பெற வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதால் அவர்களுக்கு அந்த தொகுதிகளை திமுக ஒதுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி கேட்கும் 40 தொகுதிகளை திமுக ஒதுக்குமா என்று பார்த்தால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 20 தொகுதிகள் மட்டுமே திமுக ஒதுக்கும் என்றும், அதற்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: எஸ்ஐஆர் பணியில் மிகப்பெரிய குளறுபடி…நாதக வேட்பாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!