Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுகவை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி கிடையாது…ஜெயக்குமார் தாக்கு!

DMK Has No Right To Talk About AIADMK: அதிமுகவை பற்றி பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது என்று அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், தான் போட்டியிடும் தொகுதி குறித்து தெரிவித்தார்.

அதிமுகவை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி கிடையாது…ஜெயக்குமார் தாக்கு!
அதிமுவை பற்றி பேச திமுகவினருக்கு உரிமையில்லை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 15 Dec 2025 14:06 PM IST

சென்னையில் எம். ஜி. ஆர் மாளிகையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் அதிமுக சார்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 15) நடைபெற்றது. இந்த நிகழ்வில், பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும். எனவே, ஸ்டாலினே GO BACK என்ற அளவுக்கு மக்களின் மனநிலை தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் நிலையில் நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். இந்த தேர்தலில் அதிமுக ஒரு மகத்தான வெற்றியை பதிவு செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த விருப்பமான பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அமைச்சர் ரகுபதிக்கு தார்மீக உரிமையில்லை

அதிமுக எதற்காக முன்கூட்டியே விருப்ப மனுவை பெறுகிறது என்பது தொடர்பான கேள்வியை எழுப்புவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு தார்மீக உரிமை கிடையாது. அவருக்கு அதிமுகவை பற்றி நன்றாகவே தெரியும். தற்போது அவர் கட்சி வேஷ்டியை மாற்றி கட்டி இருப்பதால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேசுகிறார். அதிமுகவிலிருந்து சென்றவர்களே திமுகவை வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க: விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அரசியல் கட்சிகள்.. தமிழகத்தில் பரபரக்கும் தேர்தல் களம்!!

அதிமுகவின் ரத்தத்தை குடித்தவர்கள் திமுகவில் உள்ளனர்

அதிமுகவின் ரத்தத்தை குடித்து கொழுத்தவர்கள் நிறைய பேர் திமுகவில் உள்ளனர். அவர்கள் தான் ஸ்டாலினுக்கு பல்லக்கு தூக்குகின்றனர். இதைவிட கேடு கெட்டது உதயநிதி ஸ்டாலினுக்கு பல்லக்கு தூக்குவதாகும். எஞ்சின் இல்லாமல் அதி வேகமாக செல்லக்கூடிய அதிமுக என்ற இயக்கத்தை பார்த்து உதயநிதி ஸ்டாலின் விமர்சிக்கிறார். கட்சியின் பலம் அறிந்து அதிமுக தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து தலைமை முடிவு செய்யும்.

ராயபுரம் தொகுதியில் மீண்டும் போட்டி

கடந்த 25 ஆண்டு காலம் எனக்கு வெற்றியை கொடுத்த ராயபுரம் தொகுதியில் தான் போட்டியிட உள்ளேன். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏற்பட்ட கஷ்டங்களை சந்தித்த அந்த தொகுதி மக்களுக்கு தெரியும். அதன்படி, வெற்றியே தேடித் தருவார்கள். எந்த சூழ்நிலையிலும் ராயபுரம் தொகுதியை விட்டு நான் விலகிச் செல்ல மாட்டேன். அதிமுகவில் யாரை சேர்க்க வேண்டும். யாரை நீக்க வேண்டும் என்பது தொடர்பாக கட்சி தலைமையும், பொதுச் செயலாளரும் தான் முடிவு செய்வார்கள். இதில், நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. பதவிக்காகவும், பணத்துக்காகவும் உதயநிதிக்கு பல்லக்கு தூக்கும் அமைச்சர்கள் திமுகவில் மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் டி . ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க: பாமகவும் தேவையில்லை…எம்எல்ஏ பதவியும் தேவையில்லை….ஜி. கே. மணி ஆவேசம்!