Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. சேலம் அருகே பரபரப்பு!!

திமுக நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சர்வ சாதாரணமாக துப்பாக்கி பயன்படுத்தும் அளவுக்கு தமிழ்நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டதா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படியும் இங்கு சாதாரணமாக படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. சேலம் அருகே பரபரப்பு!!
மாதிரிப் படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Nov 2025 14:32 PM IST

சேலம், நவம்பர் 22: சேலம் அருகே திமுக நிர்வாகி ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறுக் காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் மேலை நாடுகள் போல், சிறு தகராறுக்கு கூட தமிழகத்திலும் சுட்டுக் கொல்லும் அளவுக்கு துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, சராசரி மனிதர்கள் சாதாரணமாக துப்பாக்கி பயன்படுத்தும் அளவுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா? துப்பாக்கி வந்தது எப்படி? உளவுத்துறை என்ன செய்கிறது போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அரசை சரமாரியாக விமர்சித்து வருகிறன்றன.

இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!

ஏற்கெனவே இருந்த நிலத்தகராறு:

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ளது கரியகோவில். இங்குள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). விவசாயியான இவர், திமுக கிளை கழக செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், ராஜேந்திரனுக்கும் அவரது உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது ஏற்கெனவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வாறு வரும் தகராறை அக்கம்பக்கத்தினர் வந்து தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து வந்துள்ளனர். அதேசமயம், தகராறு குறித்து இருதரப்பும் போலீசுக்கு சென்றதாக தெரியவில்லை. இந்நிலையில், நேற்றிரவு ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

நாட்டு துப்பாக்கியால் சூடு:

அப்போது, அங்கு வந்த கும்பல், ராஜேந்திரனை நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டதாக தெரிகிறது. இதில் நிகழ்விடத்திலேயே ராஜேந்திரன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். தொடர்ந்து, கொலை செய்து விட்டு அக்கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில், இக்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், நிலத் தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இக்கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய மூன்று தினிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம்:

நிலத்தகராறுக்கு கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு, தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு? என்ற வினா தான் எழுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்றும் தொடர்ந்து தான் குற்றஞ்சாட்டி வருவதாகவும், அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், அக்கட்சி நிர்வாகியே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இது தமிழ்நாடா, வடநாடா? 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு!!

ரூ.5000க்கு கூட கிடைக்கும் துப்பாக்கி:

அதோடு, தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5,000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாமக குற்றம்சாட்டி வருவதாக கூறிய அவர், ஆனாலும், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.