தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதா? செல்வப்பெருந்தகை பரபரப்பு விளக்கம்!

தவெக தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. அதோடு, இந்த பேச்சுவார்த்தையானது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மட்டத்தில் நடைபெறாமல், மத்தியில் உள்ள தலைவர்களுடன் ரகசியமாக நடந்ததாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதா? செல்வப்பெருந்தகை பரபரப்பு விளக்கம்!

விஜய், செல்வப்பெருந்தகை

Updated On: 

17 Nov 2025 10:20 AM

 IST

சென்னை, நவம்பர் 17: தவெக (தமிழக வெற்றி இயக்கம்) மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளிவந்த தகவல்களை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுத்துள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பெற்ற வெற்றியை தொடர்ந்து, எழுந்த உற்சாகம் பாஜக தொண்டர்களுக்கு தெற்கு மாநிலங்களிலும் புத்துணர்வு தந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதனால், மத்திய பிரமுகர்களின் அரசியல் கவனம் தற்போது தமிழகம் நோக்கி திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, விஜய் அரசியல் வருகைக்கு பின் தமிழக அரசியலே மாற்றம் கண்டது எனக் கூறலாம், பழம்பெரும் கட்சியான அதிமுகவே, விஜய்யுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இதையும் படிக்க : “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்

அதிக சீட் கேட்கும் காங்கிரஸ்:

அந்தவகையில், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திமுகவிடன் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதி பங்கீடு கேட்டு வலியுறுத்துவதோடு, ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்றும் நிர்பந்தம் கொடுத்து வருகிறது. ஆனால், பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு நிலைமை மாறியுள்ளதாகவும், இப்போது காங்கிரஸ் நிர்பந்திக்கும் சூழ்நிலையில் இல்லை என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் தலைமை தவெகவுடன் கூட்டணி அமைக்கலாமா என பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் பரவி வருகிறது. மேலும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.  அதோடு, தமிழகத்தில் காங்கிரஸுக்கு 70 இடங்கள், ஆட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாகவும், புதுச்சேரி, கேரளா காங்கிரஸில் தவெகவில் ஆட்சியில் அதிகாரம் வழங்கப்படும் என்ற பேச்சும் நடந்ததாக வதந்திகள் பரவியது.

செல்வப்பெருந்தகையின் மறுப்பு:

இந்த வதந்திகளுக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “தவெக தலைவர்களுடன் காங்கிரஸ் சார்பில் யாரும் எந்தப் பேச்சும் நடத்தவில்லை. பேச வேண்டிய சூழல் வந்தால் கிரிஷ் சோடங்கர்தான் பேசுவார். அவரும் இது தொடர்பான எந்த உரையாடலும் நடக்கவில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார். எனவே இந்த செய்திகள் அனைத்தும் வதந்தி மட்டுமே” என்று கூறினார்.

தவெக போராட்டத்திற்கு வரவேற்பு:

சிவகங்கையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது, SIR பிரச்சனையில் விஜய் கட்சி நடத்திய போராட்டத்தை வரவேற்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. பீகார் தேர்தலில் தோல்வி அடைந்தது காங்கிரஸ் அல்ல; ஜனநாயகமே பின்னடைந்தது. தமிழகத்தில் அது நிகழ வாய்ப்பு இல்லை, ஏனெனில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது.

இதையும் படிக்க : நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

ஆட்சியில் பங்கு கேட்கவில்லை:

மேலும் அவர் கூறும்போது, “ராகுல் வந்த பிறகு காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது என்று பாஜக கூறுகிறது. ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும் அதன் கூட்டணியும் முழுமையாக தோல்வியடைந்தது. கர்நாடகா, தெலங்கானா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் அதே நிலை. வெற்றியும், தோல்வியும் இரண்டையும் காங்கிரஸ் சமநிலையுடன் ஏற்கிறது. தமிழகத்தில் ஆட்சிப் பங்கைக் கேட்க நான் ஒருபோதும் முயன்றதில்லை; சிலர் சொன்ன கருத்தை மட்டுமே வெளிப்படுத்தினேன்,” என்றார்.