டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
Rain alert: குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, டிசம்பர் 13: தமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு (Rain) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் கூறியுள்ளது. தமிழகத்தில் தித்வா புயல் காரணமாக கடந்த நவம்பர் மாத இறுதி (நவ.23) முதல் டிசம்பர் மாத (டிச.3) தொடக்கம் வரை பரவலாக மழை பெய்தது. அந்தசமயம், வட தமழிகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பின், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய இடங்களில் மிதமான மழையுமே பெய்து வந்தது. தொடர்ந்து, தற்போது கடந்த 10 நாட்களாக மாநிலத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இதையும் படிக்க : தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..
டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
இதனிடையே, தற்போது இரண்டு நாட்களாக தமிழகம் முழுக்க பரவலாக வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.




நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு:
அதேபோல், நாளை (டிசம்பர் 14) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!
குறையும் வெப்பநிலை:
அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான அறிவிப்பு:
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.