Diwali Festival: வெறிச்சோடிய சென்னை.. 18 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 18 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சென்னை மாநகரம் வெறிச்சோடியது. சிறப்பு ரயில்கள், அரசுப் பேருந்துகள் என இயக்கப்பட்டும், லட்சக்கணக்கானோர் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தனர். ஆம்னி பேருந்து கட்டண உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

Diwali Festival: வெறிச்சோடிய சென்னை.. 18 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

சென்னை மாநகரம்

Updated On: 

19 Oct 2025 11:37 AM

 IST

தமிழ்நாடு, அக்டோபர் 19: தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 18 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை மாநகரமே போக்குவரத்து நெருக்கடி மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்ட தலைநகரங்களில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அக்டோபர் 21ம் தேதியும் தமிழக அரசு சிறப்பு விடுமுறை அறிவித்திருந்தது.

சென்னையை பொறுத்தமட்டில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் வெளியூரிலிருந்து இங்கு வசிக்கும் மற்றும் பணியாற்றும் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில் பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட அதிலும் முன்பதிவு முடிந்து விட்டது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு ரிட்டர்ன் டிக்கெட் போடலையா? ; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இதனால் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முன்பதிவில்லாஅ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்தவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆம்னி பேருந்தின் கட்டணம் வழக்கமானதை விட மூன்று மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டாலும் வேறு வழி இன்றி பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளி கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையிலும், திரும்பி வரும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் சுமார் 20,378 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான அரசு பேருந்துகள் முன்பதிவு செய்து இயக்கப்பட்ட நிலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பதிவு செய்யாமல் வந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்கள் மணி கணக்கில் காத்திருந்து தங்களுடைய பேருந்தில் ஏறி ஊருக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் சுமார் 6,15.992 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (அக்டோபர் 18) மட்டும் தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,834 பேருந்துகள் இயக்கப்பட்டு மொத்தம் 4,926 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்காக இயக்கப்பட்டது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?

இதன் மூலம் 2,56,152 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. இப்படியான நிலையில் சிலர் தங்களது சொந்த வாகனங்களிலும் வாடகை வாகனங்களிலும், சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டு வருவதால் சென்னையின் புறநகர் பகுதியில் தொடங்கி கிட்டத்தட்ட விழுப்புரம் வரை மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து இதுவரை 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட 9.5 லட்சம் பேர்  ரயில்கள் மூலமும், 6.15 லட்சம் பேர் அரசு பேருந்துகள் மூலமும் பயணித்துள்ளனர்.

அதேபோல் தனியார் பேருந்துகளில் 2 லட்சம் பேரும், சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் 1.5 லட்சம் பேரும் வெளியூருக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் சாலை மக்கள் நடமாட்டம் இன்றி மிகப்பெரிய அளவில் வெறிச்சோடி காணப்படுகிறது.