Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.500 பணத்தால் வந்ததா இந்த பிரச்னை? சிவகங்கை அஜித் மரணத்தில் வெளியான புது தகவல்!

Sivaganga Lockup Death: சிவகங்கை மடப்புரம் கோவிலில் ₹500 விவாதம், அஜித் குமார் என்ற இளைஞரின் மரணத்தில் முடிந்தது. 24 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், 18 காயங்களுடன் உயிரிழந்ததாகவும் போஸ்ட்மார்டம் அறிக்கை தெரிவிக்கிறது. ஐஏஎஸ் அதிகாரிக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ.500 பணத்தால் வந்ததா இந்த பிரச்னை? சிவகங்கை அஜித் மரணத்தில் வெளியான புது தகவல்!
உயிரிழந்த அஜித் குமார்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 02 Jul 2025 11:05 AM

சிவகங்கை ஜூலை 02: சிவகங்கை (Sivaganga) மடப்புரம் கோவிலில் (Madapuram Temple) ₹500 விவாதத்தில் துவங்கிய பிரச்சனை, அதிகாரம் பயன்படுத்தி வழக்கு போடப்பட்டதாக பரபரப்ப ஏற்பட்டுள்ளது. அஜித் குமார் (Ajithkumar) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்தப்படாமல் கொடூரமாக தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் மீது 18 காயங்கள் உள்ளதாக போஸ்ட்மார்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தாக்குதல் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக எச்சரித்து, அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சியில் மட்டும் 34 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற எச்சரிக்கையும் விசாரணை உத்தரவும்

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் லாக்கப்பில் உயிரிழப்பு சம்பவங்கள் குறித்து, நீதிமன்றம் கடுமையாக அரசை எச்சரித்து வருகிறது. “இனி எந்த லாக்கப்பிலும் மரணம் நடக்கக் கூடாது” என தமிழக அரசுக்கு மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது நீதித்துறை. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி சுந்தர்லால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. அவர், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் எட்டாம் தேதி இளைய நீதிமன்றத்திற்கு ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

500 ரூபாய் தான் காரணமா?

2025 ஜூன் 27ம் தேதி காலை 11 மணியளவில், நிகிதாவும், அவரது தாயாரும் மடப்புரம் கோவிலுக்குச் சென்றதாகவும், அங்கு ஒரு வீல் சேருக்காக அஜித் குமார் என்பவர் ₹500 கேட்டதாகவும், அதற்கு பதிலாக நிகிதா ₹100 மட்டுமே தர விரும்பியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த வாக்குவாதத்தின் பின்னணியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிகிதா, அஜித் குமார் மீது திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனை வழக்கறிஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திடுக்கிடும் தாக்குதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்ட நேரம்

இதற்கு பின்னணி இப்படி இருந்தாலும், அந்த இளைஞர் அஜித் குமார் 27ஆம் தேதி சாயங்காலம் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 2025 ஜூன் 28ம் தேதி வரை தடுத்துவைக்கப்பட்டார். அவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல், பலத்தமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாகவே அவர் உயிரிழந்தார்.

முதல் தகவல் அறிக்கையும், போஸ்ட்மார்ட் அறிக்கையும் 18 இடங்களில் காயங்கள் உள்ளதாகக் கூறுகின்றன. மேலும் ஒரு விரிவான மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அறிக்கைகளும் வழக்கறிஞர்களின் செயல்பாடும்

இந்த கொடூரமான லாக்கப் மரணம் குறித்து மூத்த வழக்கறிஞர் என்டிபன் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் 34 லாக்கப் மரணம் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வழக்கு தொடுத்துள்ளன.

நீதிமன்றத்தில் எழுந்த கேள்விகள்

இந்நிலையில், “ஸ்பெஷல் டீம்களுக்கு யார் அதிகாரம் அளிக்கிறார்கள்? இவர்கள் சூமோட்டோ அதிகாரம் பெற்றதற்கு யார் பொறுப்பு?” என்பன உள்ளிட்ட பல கேள்விகள் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டன. நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது, அவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பரவலாக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

வழக்கு ஒப்படைப்பு உத்தரவும் மக்களின் எதிர்பார்ப்பும்

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைத்து தரப்புகளும் எட்டாம் தேதி இளைய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. “இந்த வகைமான கொடூரங்கள் இனிமேல் தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது” என்ற பொதுமக்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் வகையில் நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.