மாணவி குறித்து சர்ச்சை கருத்து.. கல்லூரி முதல்வர் கைது.. நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் நடந்தச் சம்பவம் ஒன்று அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவரிடம் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, ஜனவரி 07: நெல்லை அருகே ஆசிரியர் ஒருவரே தனது கல்லூரி மாணவி குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பழையபேட்டையில் ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரி மாணவி ஒருவரைப் பற்றி, சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துகள் பகிரப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கல்லூரி முதல்வரே இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபட்டது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: குடும்ப பிரச்சனையில் விபரீதம்.. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி, தாயும் தற்கொலை செய்துகொண்ட துயரம்..
ஆசிரியர் ஒழுங்காக பாடம் நடத்தவில்லை என புகார்:
பழையபேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியர் ஒழுங்காக பாடம் நடத்தவில்லை என்று யூடியூப்பில் பேசியிருந்தார். அந்த மாணவியை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருவது மாணவியின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதனை கண்டு திகைத்துப்போன அந்த மாணவி, இச்சம்பவம் குறித்து கடந்த மாதம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதா (தற்போதைய பொறுப்பு கல்லூரி முதல்வர்) அவரது சொந்த சமூக வலைத்தள பக்கத்திலிருந்தே தன்னைப் பற்றி அவதூறாக கருத்துகள் பதிவு செய்ததாக தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த சைபர் கிரைம் போலீசார்:
தொடர்ந்து, அந்த புகார் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் புகார் குறித்து நெல்லை மாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி முதல்வர் சுமிதாவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் அவரது கணவர் பொன்னுதுரையும் அவதூறு ஆபாச கருத்துகளை பதிந்து பரப்பியது தெரியவந்தது.
இதையும் படிக்க: ‘என்னை நம்பி பல உசுரு வருது’.. கடமையை செய்த ரயில்வே கேட் ஊழியர்.. தஞ்சாவூரில் பரபர சம்பவம்!
கல்லூரி முதல்வரும், அவரது கணவரும் கைது:
இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நேற்று காலை சுமிதா பொன்னுதுரை ஆகியோரிடம் சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த விசாரணைக்கு பின்னர், 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.