கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பிய சிறுவன் பலி – என்ன நடந்தது?
Tragic Incident at Velliangiri : சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பிய சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் மரணம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர், மே 13 : கோயம்புத்தூரில் (Coimbatore) இருந்து கிட்டத்தட்ட 40 கி.மீ தொலைவில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இந்த மலையில் உள்ள சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் சிவை தரிசிக்க வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள். இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பிய 15 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விஸ்வா என்ற அந்த சிறுவன் தனது தந்தையுடன் வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். பின்னர் திரும்பும் வழியில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக சிறுவன் அடிவாரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அங்கு அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா பௌர்ணமி என்பதால் மே 12, 2025 அன்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மகன் விஷ்வா ஆகியோர் உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்ய வெள்ளியங்கிரி வந்திருக்கின்றனர். இரவில் மலையேறி சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மலையடிவாரத்துக்கு திரும்பும்போது சரியாக அதிகாலை 5 மணி அளவில் சிறுவன் மயங்கி விழுந்திருக்கிறார்.
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரவிக்கப்பட்டு அவர்கள் மூலம் அடிவாரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த தகவல் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விஷ்வாவின் உடல் பிரதேச பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவருக்கு நேர்ந்த சோகம்
இதே போல கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் அஜ்சல் சைன் தனது நண்பர்களுடன் கடந்த மே 5, 2025 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டாப் சிலிப் மலைக்கு டிரெக்கிங் சென்றிருக்கிறார். பின்னர் டிரெக்கிங் முடித்துவிட்டு அடிவாரத்திற்கு திரும்பியிருக்கிறார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
மலையேற்றத்தின் போது 60 வயதுக்கு மேற்பட்டோர் மலையேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதே போல முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் டிரெக்கிங் செல்வதற்கு முன் மருத்துவர் அஜ்சல் சைன் முறையான மருத்துவ பரிசோதனைகளை செய்திருக்கிறார். உடல் ரீதியாக தகுதியாக இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகே அவர் டிரெக்கிங் சென்றிருக்கிறார்.
மலையேற்றத்துக்கு முன் செய்ய வேண்டியவை
மலையேற்றத்துக்கு முன் உங்கள் உடல் நிலையில் எந்தவொரு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். இருதய நோய்கள், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனை அவசியம். ஸ்போர்ட்ஸ் ஷூ அல்லது டிரெக்கிங் ஷூ அணிய வேண்டும். கனமான உடைகள் தவிர்த்து, லைட் வெயிட் உடைகளை பயன்படுத்தலாம். குடிநீர், சிறிய உணவுப் பொருட்கள் , முதலுதவி பெட்டி ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் ரெயின்கோட் எடுத்துக்கொள்வது நல்லது. சில மலைகளுக்கு அரசு அனுமதி தேவை. அதனால் முறையான அனுமதி பெற்ற மலை ஏற வேண்டும்.
தனியாக செல்லாமல் குழுவாக செல்லுங்கள். குழுவில் ஒருவராவது அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இரவு நேரம் தவிர்த்து காலை அல்லது பகல் நேரத்தில் மலையேற்றம் செய்வது பாதுகாப்பானது. மழை அல்லது புயல் எதிர்ப்பார்க்கப்படும் நேரத்தில் தவிர்க்க வேண்டும்.