ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Thevar jayanthi 2025: பசும்பொன்னில் இன்று காலை முத்துராமலிங்கத் தேவருகுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், அதைத்தொடர்ந்து, சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் பசும்பொன் படையெடுத்துள்ளனர்.




ராமநாதபுரம், அக்டோபர் 30: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் ரூ.3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின், நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி, சென்னையில் இருந்து நேற்று இரவே அவர் மதுரைக்கு சென்றுவிட்டார். அங்கு, அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், இன்று காலை சாலை மார்க்கமாக பசும்பொன் சென்றார். முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Also read: மதுரையில் துணை குடியரசுத் தலைவரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. நலம் விசாரிப்பு!!
அதோடு, மதுரையில் மருது பாண்டியர்களின் குருபூஜை விழாவையொட்டி, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, தங்கம் தென்னரசு, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பசும்பொன்னில் தேவர் பெயரில் மண்டபம்:
#WATCH | Ramanathapuram | Tamil Nadu CM MK Stalin pays ṭribute to freedom fighter Pasumpon Muthuramalinga Thevar at his memorial in Pasumpon on his 63rd guru pooja and 118th jayanthi. pic.twitter.com/CPacjpgfH2
— ANI (@ANI) October 30, 2025
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்களும் வழிமொழிகிறோம் என்றார். மேலும், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் ரூ.3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதோடு, பசும்பொன் தேவருக்கு மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி என்று நினைவுகூர்ந்த அவர், திமுக ஆட்சியில் பசும்பொன்னில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை:
அதேபோல், 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் பசும்பொன் சென்றிருந்தார். மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்ற அவர், முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது ஜமீன் சொத்துக்களில் பெரும் பகுதியை பிற சமுதாயத்தினருக்கு வழங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றார். மேலும், பற்றற்ற பண்பாளர் தேவர் திருமகனார். அவரைப் போற்றுவது தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவதாகும். நேதாஜியின் தளபதியாக திகழ்ந்தவர் வீரத்திருமகனார் முத்துராமலிங்க தேவர் என்றும், சத்தியம், வாய்மையை கடைபிடித்தவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் என்ட்ரி:
தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மதுரையில் இருந்து பசும்பொன் சென்று மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, சீமான், வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் பசும்பொன் படையெடுத்துள்ளனர். அடுத்தடுத்த அரசியல் தலைவர்கள் வருகையால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. அங்கு, பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 8,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.