Chennai Rains : சென்னையில் மேகவெடிப்பு… கொட்டித் தீர்த்த கனமழை.. வெதர்மேன் கொடுத்த தகவல்!
Chennai Weather Today : சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 31 : சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை (Chennai Weather Today) கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் நள்ளிரவில் கனமழை கொட்டியுள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்ததாக தமிழ்நாடு வெதர்மேன் (Tamil Nadu Weatherman) பிரதீப் ஜான் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தென்காசி, தேனி என மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, கடந்த வாரம் மழை பெய்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது. எழும்பூர் தொடங்கி சைதாப்பேட், மீனம்பாக்கம், ஆலந்தூர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை புறநகரான தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் காலை நேரங்களில் வெயில் அடித்தும், இரவு நேரத்தில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
Also Read : அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. சென்னையில் நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்
சென்னையில் மேகவெடிப்பு
The 1st cloudburst for Chennai this year. Many places have got over 100 mm in less than an hour.
South Chennai it will be your turn now to get the intense spell we got in north and north west Chennai
— Tamil Nadu Weatherman (@praddy06) August 30, 2025
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “2025ஆம் ஆண்டு முதன்முதலில் சென்னையில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மீ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. வட சென்னையிலும், வடமேற்கு சென்னையிலும் கொட்டித் தீர்த்த கனமழை, தற்போது தென் சென்னைக்கு வர இருக்கிறது” என பதிவிட்டு இருந்தார்.
Also Read : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்
அதோடு நள்ளிரவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதற்கிடையில், தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.