இனி மழை இல்லை.. பொளக்கப்போகும் வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வரும் நாட்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 24, 2025: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் 24 ஆகஸ்ட் 2025 தேதியான இன்று காலை முதல் மீண்டும் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக அறந்தாங்கி (புதுக்கோட்டை) 5, பரமக்குடி (ராமநாதபுரம்), இளையாங்குடி (சிவகங்கை) தலா 4, விருதுநகர் (விருதுநகர்), சாத்தியார் (மதுரை), கல்லந்திரி (மதுரை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சிட்டம்பட்டி (மதுரை) தலா 3, தேவகோட்டை (சிவகங்கை), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), மேட்டுப்பட்டி (மதுரை), கூடலூர் பஜார் (நீலகிரி), மிமிசல் (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), ஆயிங்குடி (புதுக்கோட்டை) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு:
மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 24 ஆகஸ்ட் 2025 தேதியான இன்று ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை வரும் 30 ஆகஸ்ட் 2025 ஆம் தேதி வரை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ’சீமான் சொன்னது தான் உண்மை’ விஜய் குறித்து பேசிய பிரேமலதா!
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை என்பது பாளையங்கோட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 32.6 டிகிரி செல்சியஸ் நுங்கம்பாக்கத்தில் 32.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
மேலும் படிக்க: வரலாற்று சின்னம்.. அகற்றப்படும் பழைய பாம்பன் பாலம்.. டெண்டர் அறிவிப்பு!
வரும் நாட்களில் அதிகரிக்கும் வெப்பநிலை:
தொடர் மழையின் காரணமாக வெப்பநிலை குறைந்து வந்த நிலையில் அடுத்த வரும் சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.