நீலகிரியில் பதிவான 15 செ.மீ மழை.. இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் கடந்த சில் நாட்களாக மிதமான மழை பதிவான நிலையில் ஆகஸ்ட் 28, 2025 தேதியான நேற்று நீலகிரியில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 29, 2025 தேதியான இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 29, 2025: தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மிதமான மழை மட்டுமே பெய்து வந்த நிலையில், மீண்டும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியுள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 15, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 12, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 10, மேல் கூடலூர் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 7, கூடலூர் பஜார் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
அதே நேரத்தில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி (இன்று) தமிழகத்தில் நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல 2025 ஆகஸ்ட் 30 ஆம் தேதி (நாளை) தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வெண்டிலேட்டர் சிகிச்சையில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் சொன்னது என்ன?
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 29, 2025
மேலும், 2025 ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சேலத்தில் பயங்கரம்.. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரம் குறையும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 37.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் 37.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 34 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.