அண்ணா ஆப்: சென்னைப் போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட்! எப்போது வரும்..?

All Transport with One Ticket: சென்னையில் புதிய "அண்ணா ஆப்" மூலம் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட் பெறலாம். UPI மூலம் கட்டணம் செலுத்தி QR கோட் டிக்கெட் பெறலாம். பயணத் திட்டமிடல், வழித்தடத் தேர்வு உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த ஆப், 2025 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும்.

அண்ணா ஆப்: சென்னைப் போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட்! எப்போது வரும்..?

சென்னைப் போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட்

Published: 

12 Jul 2025 10:26 AM

சென்னை ஜூலை 12: சென்னையில் (Chennai) பயணிகள் (Passengers) வசதிக்காக, “அண்ணா ஆப்” (Anna App) என்ற புதிய செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த செயலியின் மூலம் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் ஒரே (On buses, metros, and electric trains) டிக்கெட்டில் (Single Ticket) பயணம் செய்யலாம். பயணிக்கும் இடத்தை தேர்வு செய்து, யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தி QR கோட் டிக்கெட் பெற முடியும். தற்போது சோதனை நடைமுறையில் உள்ள இந்த ஆப், இந்த மாத இறுதியில் அல்லது 2025 ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும். எந்த வழியில் எளிதாக செல்லலாம் என்பதையும் இந்த செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய முறை, பயணிகளுக்கு நேரம், பணம், முயற்சி ஆகியவற்றில் சிக்கனத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே டிக்கெட்டில் அனைத்துப் போக்குவரத்திலும் பயணிக்க புதிய முயற்சி

சென்னை நகர மக்கள் போக்குவரத்துக்காக பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை இந்த மூன்று போக்குவரத்துகளுக்கும் தனித்தனியாக டிக்கெட் வாங்க வேண்டியிருந்தது. இந்நிலையில், ஒரே டிக்கெட்டில் அனைத்துப் போக்குவரத்திலும் பயணிக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் ‘ஒன் கார்டு’ திட்டம்

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA) புதிய ‘ஒன் கார்டு’ என்ற பிரத்தியேக டிக்கெட் சேவையை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த டிக்கெட் சேவை, ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு போன்ற வடிவில் வழங்கப்படும் ஒரு ‘ஒன் கார்டு’ அட்டையின் மூலம் இயங்கும். பயணிகள் தேவைக்கேற்ப, அந்த அட்டையில் பணத்தை ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள முடியும். பின்னர், எந்த போக்குவரத்தையும் நேரடியாக பயன்படுத்தி பயணிக்கலாம். மேலும், ஒவ்வொரு பயணத்துக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல், நேரம் மற்றும் முயற்சியிலும் சிக்கனம் கிடைக்கும்.

புதிய மொபைல் செயலி “ANNA APP”

சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) உருவாக்கியுள்ள புதிய மொபைல் செயலி “ANNA APP” தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியின் மூலமாக, பயணிகள் செல்ல வேண்டிய இடம், புறப்படும் இடம், மற்றும் பயண வகையை தேர்வு செய்யலாம். பின்னர், மொத்த கட்டணம் காட்டப்பட்டு, யுபிஐ (UPI) மூலம் கட்டணத்தை செலுத்தி, QR குறியீட்டுடன் கூடிய டிக்கெட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

Also Read: காவலர்கள் வார விடுமுறை எடுக்க புதிய செயலி.. இதன் சிறப்பம்சம் என்ன?

ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்

இது மட்டுமல்லாமல், இந்த செயலியில் எந்த வகை போக்குவரத்தை எப்போது பயன்படுத்துவது, விரைவாக செல்ல ஏற்ற வழிகள், பகுதிகளுக்கேற்ற போக்குவரத்து வகை உள்ளிட்ட விவரங்களும் கிடைக்கும். புதிய செயலி இந்த மாத இறுதியில் அல்லது 2025 ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

இந்த செயலியின் அறிமுகம், சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் போக்குவரத்திற்குப் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.