பொதுமக்களே உஷார்.. சென்னையில் நவோனியா கொள்ளை கும்பல்!

Navonia Robbery Gang: சென்னையில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நவோனியா கும்பல் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற கூட்ட நெரிசலான இடங்களை இலக்காகக் கொண்டு செயல்படும் இந்தக் கும்பலில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களே உஷார்.. சென்னையில் நவோனியா கொள்ளை கும்பல்!

நவோனியா கொள்ளை கும்பல்

Updated On: 

09 Sep 2025 14:44 PM

 IST

தமிழ்நாடு, செப்டம்பர் 9: சென்னையில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நவோனியா கும்பல் ஊடுருவியுள்ளதாக பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த கும்பல் நகருக்குள் ஊடுருவியுள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் திருட்டு உள்பட குற்ற சம்பவங்கள் ஒருபுறம் நிகழ்ந்து வந்தாலும் மறுபுறம் அதனை தடுக்க காவல்துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல சம்பவங்களில் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் விரைந்து பிடிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்த நபர்கள் அல்லது கும்பல் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம்.

தமிழ்நாட்டில் நவோனியா கும்பல்

அந்த வகையில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நவோனியா கும்பல் சென்னையில் ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைகுட்டை மற்றும் துண்டு போன்ற பொருட்களால் திருடுவதாக தெரியவந்துள்ளது. இந்த கும்பல் வழக்கமாக செயல்படும் முக்கிய இடங்களாக அறியப்பட்டுள்ள சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!

இந்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் உடனடியாக இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மெரினா கடற்கரை போன்ற சுற்றுலாத்தலங்கள் ஆகிய இடங்களில் கூட்டத்தை பயன்படுத்தி நகை, மொபைல்போன், பணம் போன்றவற்றை திருடுவதில் இந்த நவோனியா கும்பல் கைதேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பல் குறைந்தபட்சம் ஒரு வார முதல் அதிகபட்சம் ஒரு மாதம் வரை ஒரு பகுதியில் தங்கி திருடிய பொருட்களை சேர்த்த பிறகு தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவார்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 4 பேர் கைது

கடந்த 2025 ஜூலை 31 அன்று மெரினா கடற்கரையில் ஒரு நபரிடம் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக மெரினா கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மீது ஏற்கனவே ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

Also Read:  சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!

அதேபோல் மாம்பலம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகே ஒரு முதியவரிடம் மொபைல் போனை திருட முயன்ற இந்த கும்பலை சேர்ந்த ஒருவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களுக்கும் மாநில தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தங்கள் உடமைகளில் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.