சென்னையில் ‘நோ பார்க்கிங்’, நடைபாதை ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி.. AI தொழில்நுட்பத்துடன் புதிய திட்டத்தை கொண்டுவரும் காவல்துறை!!
Chennai traffic police AI parking system: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி 'நோ பார்க்கிங்' மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சார்ந்த 'ஸ்மார்ட் பார்க்கிங் மற்றும் மீறல் அமலாக்க அமைப்பு' புதிய திட்டத்தை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, நவ.13: தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடர்பான பிரச்சினைகள் வாடிக்கையாகிவிட்டன. முக்கியச் சாலைகள், வணிக வளாகப் பகுதிகள் மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை முறையற்ற விதத்தில் நிறுத்துவது பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக மாறி வருகிறது. இந்தச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில், சென்னை மாநகரக் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் பல்வேறு நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தற்போது அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பொங்கல் 2027: ஊருக்கு போற பிளான் இருக்கா? ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!
ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த ‘ஸ்மார்ட் பார்க்கிங்’:
சென்னையில் பார்க்கிங் முறைகளை நவீனமயமாக்கவும், விதிகளை மீறுபவர்களைத் துல்லியமாகக் கண்டறிந்து அபராதம் விதிக்கவும் ‘ஸ்மார்ட் பார்க்கிங் அண்ட் வயலேஷன் என்ஃபோர்ஸ்மென்ட் சிஸ்டம்’ என்ற புதிய நவீன அமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பார்க்கிங் ஸ்லாட்டுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும். குறிப்பாக, நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்கள், இரட்டை வரிசையில் வாகனங்களை நிறுத்திக் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் ‘நோ பார்க்கிங்’ பகுதிகளில் அத்துமீறி வாகனங்களை நிறுத்தும் நபர்களை இந்த ஏஐ தொழில்நுட்பம் உடனடியாகக் கண்டறிந்துவிடும்.
தொழில்நுட்ப செயல்பாடுகள்:
இந்தச் புதிய ஏஐ அமைப்பின் சிறப்பம்சமாக, எந்தெந்த பார்க்கிங் ஸ்லாட்டுகள் காலியாக உள்ளன, எவை நிரம்பியுள்ளன என்பது குறித்த விவரங்களை நிகழ்நேரத்தில் (Real-time) துல்லியமாக அறிய முடியும். ஒரு வாகனம் அங்கு வந்து நின்ற நேரம், புறப்பட்டுச் சென்ற நேரம் மற்றும் எவ்வளவு நேரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது போன்ற அனைத்துத் தரவுகளும் தானாகவே பதிவு செய்யப்படும். மேலும், உரிய கட்டணம் அல்லது டிக்கெட் பெறாமல் வாகனங்களை நிறுத்தி விதிகளை மீறுபவர்களைக் கண்டறிந்து, அதற்கான குற்றப் பதிவுகளையும் இந்தத் தொழில்நுட்பம் உடனடியாக வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: குழந்தைகள் தினக் கொண்டாட்டம் – 61.84 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை..
சிசிடிவி கேமராக்களின் பயன்பாடும் வரவேற்பும்:
இந்தத் திட்டத்திற்காகச் புதிய உள்கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்காமல், ஏற்கனவே சென்னையில் உள்ள சிசிடிவி மற்றும் ஐபி (IP) கேமராக்களையே இணைத்து இந்த ஏஐ பார்க்கிங் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை மனிதர்களின் தலையீடு இன்றியே தானியங்கி முறையில் கண்டறிந்து அபராதம் விதிக்க முடியும். சென்னையில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கும், பார்க்கிங் முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கும் சென்னை காவல்துறை எடுத்துள்ள இந்த நவீன ஏஐ நடவடிக்கை பொதுமக்களிடையேயும் வாகன ஓட்டிகளிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.