தமிழகத்தில் 23- ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு…மீனவர்களுக்கு சூறாவளிக்காற்று எச்சரிக்கை…வானிலை ஆய்வு மையம்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை 48 மணி நேரத்தில் விலக உள்ள நிலையில், வரும் ஜனவரி 23- ஆம் தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வட கிழக்கு பருவ மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு உள்ளது. இதனிடையே, குமரி கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், இன்று சனிக்கிழமை ( ஜனவரி 17) முதல் ஜனவரி 21- ஆம் தேதி ( புதன்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ உள்ளது. அதிகாலையில் ஒரு சில இடங்களில் லேசான பணிமோட்டம் காணப்படக்கூடும். இதே போல, ஜனவரி 22- ஆம் தேதி ( வியாழக்கிழமை) புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவ உள்ளது. ஜனவரி 23- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கொடைக்கானல்-ஊட்டியில் உறை பனி நிலவக் கூடும்
தமிழகத்தின் உள் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதனிடையே, இன்று சனிக்கிழமை ( ஜனவரி 17) முதல் ஜனவரி 21- ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பையொட்டி இருக்கக்கூடும். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உறை பனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இந்த இருமல் மருத்துக்கு தடை.. குழந்தைகளுக்கு தவறிக்கூட இதை கொடுக்காதீர்கள்!!
சென்னையில் வானம் மேக மூட்டம்
இதே போல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ( சனிக்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 30-31 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21-22 டிகிரி செல்சியஸும் காணப்படும். நாளை ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 18) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
மீனவர்களுக்கு சூறாவளிக் காற்று எச்சரிக்கை
அதிகபட்ச வெப்பநிலையாக 30-31 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21-22 டிகிரி செல்சியஸும் காணப்படும். தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. அதன்படி, மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடை இடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பாஜக கூட்டணியில் இணைகிறதா அமமுக?டிடிவி தினகரன் கூறிய பதில்!