3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 5, 2026: கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 5ஆம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:
அதேசமயம், தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் 6ஆம் தேதி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 7ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 10ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடிக்கக்கூடும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை:
இதற்கிடையில், வெப்பநிலையின் தாக்கமும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புதிய கட்சி அறிவிப்பு? முக்கிய தகவலை வெளியிட்ட அண்ணாமலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 40.3 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 39.1 டிகிரி செல்சியஸ், புதுச்சேரியில் 38.8 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38.6 டிகிரி செல்சியஸ், நாகையில் 38.8 டிகிரி செல்சியஸ் மற்றும் மதுரையில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.