சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு: தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
Seeman Slams TVK Government: நாம் தமிழர் கட்சி குறித்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன என்பதை காவல்துறை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 18, 2026: சமூக வலைதளப் பதிவுகளுக்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்காமல், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்வது அடக்குமுறையின் உச்சம் என அவர் விமர்சித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பிரச்சினையை எடுத்துரைக்க வந்த ஒருவரைத் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படும் துணை சபாநாயகரும், தவெக சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் மீதும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி, அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகக் குற்றம்சாட்டப்படும் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரசு, எதிர்க்கட்சியினரின் சமூக வலைதளப் பதிவுகளுக்கு மட்டும் உடனடியாக வழக்குப்பதிவு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெகவினர் மீதான புகார்களை காவல்துறை விசாரிக்குமா?
தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் தன்னையும், தனது கட்சியினரையும் குறிவைத்து ஆபாசமான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்புவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற பதிவுகள் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் கூகுள் பே வால் ஏற்பட்ட தகராறு.. விலக்கி விட சென்ற பால் பண்ணை உரிமையாள் கொலை.. ஒருவர் கைது!
மேலும், எழுதாத சமூக வலைதளப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவிடும் தவெக ஆதரவாளர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் வினவியுள்ளார்.
காரைக்குடி போதைப்பொருள் விவகாரத்தில் அவதூறு பரப்பியதாகக் குற்றச்சாட்டு
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்ற நபரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். அந்த நபருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை எனக் காவல்துறை தரப்பில் மறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவறான தகவலைப் பரப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: 26 நாள்கள் ரத்து முடிவு! மேட்டுப்பாளையம் டு குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. எப்போது தெரியுமா?
நீதிமன்ற அறிவுறுத்தல்களுக்கு என்ன நடவடிக்கை?
நாம் தமிழர் கட்சி குறித்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன என்பதை காவல்துறை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வழக்குகளால் குரலை ஒடுக்க முடியாது – சீமான்
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், கட்சியின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியினர் தவறு செய்தால் அமைதி காப்பதும், எதிர்க்கட்சியினர் விமர்சித்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்வதும் எந்த வகையான நீதிமுறை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் தங்களது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது என்றும், அதிகாரத்தின் அடக்குமுறைக்கு எதிராகத் தங்களது குரல் தொடர்ந்து வலுவாக ஒலிக்கும் என்றும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.