கொடைக்கானலில் படகு சவாரி திடீர் ரத்து…சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…என்ன காரணம்!

Kodaikanal Boat Rides Canceled: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி திடீரென நட்சத்திர ஏரியில் இன்று படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எப்போது படகு சவாரி தொடங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படவில்லை.

கொடைக்கானலில் படகு சவாரி திடீர் ரத்து...சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்...என்ன காரணம்!

கொடைக்கானலில் படகு சவாரி திடீர் நிறுத்தம்

Published: 

13 Jan 2026 17:07 PM

 IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மிக சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு, வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுவர். தற்போது, பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறை வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பார்கள். இதேபோல, தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இவர்கள் கொடைக்கானலில் நிலவி வரும் குளிர்ந்த சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டு, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படர்ந்துள்ள மலைகளின் அழகு மற்றும் இயற்கைகளை ரசித்தவாறு அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கமாகும்.

கொடைக்கானலில் படகு சவாரி திடீர் ரத்து

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல, கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி சேவை இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 13) திடீரென ரத்து செய்யப்பட்டதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஏற்கெனவே அங்கு சுற்றுலாவுக்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் படிக்க: பொங்கல் பண்டிகை விடுமுறை…கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு!

ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலாப் பயணிகள்

பின்னர், சிறிது நேரம் காத்திருந்த நிலையில், ஏமாற்றுத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தற்போது, ரத்து செய்யப்பட்டுள்ள படகு சவாரி சேவை மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. கொடைக்கானலில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்றின் அளவு குறையும் பட்சத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்கும் என்று தெரிகிறது.

தொடர் விடுமுறை வரும் நிலையில்…

தமிழகத்தில் நாளை புதன்கிழமை ( ஜனவரி 14) முதல் தொடர் விடுமுறை வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நோக்கி படையெடுக்க தொடங்குவர். தற்போது, பலத்த காற்று மற்றும் தொடர் மழையால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கொடைக்கானலில் படகு சவாரி மட்டுமின்றி சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி, தூண் பாறைகள், சைக்கிளிங், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், டால்பினின் மூக்கு, பசுமைப் பள்ளத்தாக்கு, குணா குகை, மற்றும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன.

மேலும் படிக்க: சென்னையில் ஹெலிகாப்டர் ரைடு…பொதுமக்களுக்காக சுற்றுலாத் துறையின் அசத்தல் ஏற்பாடு!

ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!
ஒரு கைக்குட்டையின் விலை ரூ.7 லட்சம் என்றால் நம்புவீர்களா? வேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான்..
வேகமாக உருகிய பனி.. 'சுனாமி' போல் ஏற்பட்ட வெள்ளம்!!
புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..