சட்டமன்ற தேர்தல்… தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் – யார் தெரியுமா?
BJP Appoints State In-Charges: வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக பைஜயந்த் பாண்டா மற்றும் முரளிதர் மோஹல் ஆகியோரை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பைஜெயந்த் பாண்டா - முரளிதர் மோஹல்
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு கூடுதலாக விஜய்யின் (Vijay) தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. இதனையடுத்து மும்முனை போட்டிகள் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா செப்டம்பர் 25, 2025 அன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழ்நாடு தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். அதன் படி பாஜக தேசிய துணைத் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினரான பைஜயந்த் பாண்டா (Baijayant Panda), தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சோஷியல் மீடியாவில் விஜய் டாப்.. ஸ்டாலின், உதயநிதி கம்மி தான்.. இபிஎஸ் நிலை இதுதான்!
அதேபோல், மத்திய கூட்டுறவு மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜக தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் படி, பைஜயந்த் பாண்டா தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராகவும், முரளிதர் மோகல் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பாஜக வெளியிட்ட அறிவிப்பு
BJP National President Shri @JPNadda has appointed Shri Baijayant Panda as the Election Incharge and Shri Muralidhar Mohol as the Election Co-Incharge for the Tamil Nadu Assembly elections. pic.twitter.com/0vTl7kVt30
— BJP (@BJP4India) September 25, 2025
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக கட்சி தொகுதி வாரியாக ஆய்வு, வாக்குச்சாவடி குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க : டிடிவி தினகரனை சந்தித்தது உண்மையா? செங்கோட்டையன் ஓபனாக சொன்ன விஷயம்..
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது உரைகளில் திமுக, பாஜக ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பாஜகவும் இன்று தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும் என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.