முதலில் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி விசுவாசமாக இருக்கட்டும் – செல்வப்பெருந்தகை..
Selvaperunthagai: எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருங்தகை, “ எடப்பாடி பழனிசாமி முதலில் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கட்டும். எங்கள் கட்சி பற்றி பேச அவருக்கு எந்தத் தகுதியும் அருகதையும் கிடையாது” என தெரிவித்து உள்ளார்.

செப்டம்பர் 25, 2025: “எடப்பாடி பழனிசாமி எங்கள் கூட்டணி அல்லது கட்சி பற்றியோ கவலைப்படத் தேவையில்லை. அவர் அதிமுக மற்றும் தனது கூட்டணி கட்சி பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும்,” என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் பல்வேறு கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றன.
திமுகவை போல் கூட்டணி நம்பி நாங்கள் இல்லை – எடப்பாடி பழனிசாமி:
இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரங்களில் திமுக அரசையும் கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து உரையாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக பேசுகையில், “நாங்கள் ஒருபோதும் கூட்டணியை நம்பியதில்லை. ஆனால் திமுக எப்போதும் கூட்டணியை நம்பியே செயல்படுகிறது. மக்கள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளனர். 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும், அதை ஸ்டாலின் பார்த்தே ஆக வேண்டும். அதிமுக பாஜகவின் அடிமை என்று ஸ்டாலின் பேசுகிறார்.
மேலும் படிக்க: சபரிமலைக்கு போறீங்களா? வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.. உடனே புக் பண்ணுங்க!
தலைவர் மட்டுமல்ல, தொண்டனும் யாருக்கும் அடிமை இல்லை. உங்களைப் போல கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணி அமைக்கிறோம். உங்களைப் போன்று பல கட்சிகளை கூட்டணியில் வைத்து, அவர்களை அடிமையாக மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு முதலில் விசுவாசமாக இருக்கட்டும் – செல்வப்பெருந்தகை:
இதற்கு பதிலளிக்கும் வகையில், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் மற்றும் அதை கட்டிக் காத்த ஜெயலலிதா ஆகியோரையும் பாஜக பல்வேறு விமர்சனங்களுக்குப் பயன்படுத்தியுள்ளார். இப்படியான சூழலில் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலில் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கட்டும். எங்கள் கட்சி பற்றி பேச அவருக்கு எந்தத் தகுதியும் அருகதையும் கிடையாது. நாங்கள் நாற்காலிக்காக உள்ளேயோ, காலில் விழுந்தோ பதவியை வாங்கியவர்கள் அல்ல.
மேலும் படிக்க: பாதை தகராறு.. அண்ணியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கொழுந்தன்!
எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்தக் கவலை? அவர் தனது கட்சியைப் பற்றியும் தனது கூட்டணியைப் பற்றியும் கவலைப்படட்டும். அவருடைய கட்சியிலிருந்தும் தலைவர்கள் வெளியேறுகின்றனர்; கூட்டணியிலிருந்தும் பலர் விலகுகின்றனர். அப்படியிருக்க, எங்கள் கட்சி அல்லது எங்கள் கூட்டணி பற்றி அவர் பேசத் தேவையில்லை. காங்கிரஸ் பற்றிய கவலை அவருக்கு வேண்டாம்,” என அவர் பேசியுள்ளார்.